;
Athirady Tamil News

காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது..!!

0

காஷ்மீர் சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஹேமந்த்குமார் லோகியா. இவர், ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று இரவு உணவு உண்டபின் லோகியா படுக்கை அறைக்குச் சென்றார். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த வீட்டு வேலைக்காரர், ஒரு கூர்மையான ஆயுதத்தால் டி.ஜி.பி.யை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடிவந்த போலீசார், வயல்வெளியில் பதுங்கியிருந்த யாசிர் லோகர் என்ற அந்த வேலைக்காரரை கைது செய்தனர். 23 வயதான அந்த வாலிபர், ரம்பான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுமார் 6 மாத காலமாக அந்த வீட்டில் வேலைபார்த்து வந்த அவருக்கு மனஅழுத்த பிரச்சினை இருந்ததாகவும், திடீர் திடீரென முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக்கூடியவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் கூறினர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில், கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். டி.ஜி.பி. கொலைக்கு ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்ட டி.ஜி.பி. தில்பாக் சிங் அதை மறுத்தார். எந்த கொலை நடந்தாலும் வெட்கமின்றி பொறுப்பு ஏற்பது பயங்கரவாத இயக்கங்களின் வழக்கமாக உள்ளது என்று அவர் கூறி னார். இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கு பின் டி.ஜி.பி. ஹேமந்த்குமார் லோகியாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடந்த இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு பிறகு நேற்று லோகியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.