;
Athirady Tamil News

ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.