;
Athirady Tamil News

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்..!!

0

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய மாரியம்மன் கோவில்
கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஒருநாள் மட்டும் நடைபெறும் இந்த திருவிழாவில் பி.மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருவார்கள். இதையொட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடுகள், சேத்து வேஷம் போடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும், மேலும் பெரியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

உண்ணாவிரதம்
இந்த கோவிலில் மொட்டை அடிக்கும் பணியை நம்பி அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொட்டையடிக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு ஏலம் நடந்தது.

இதனால் முடித்திருத்தும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஏலத்தை ரத்து செய்து தங்களுக்கே மொட்டை அடிக்கும் உரிமையை வழங்க வேண்டும் எனக்கோரி குடும்பத்துடன் பி.மேட்டுப்பாளையம் அனந்தசாகரம் ஏரி அருகே கவுந்தப்பாடியில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையோரம் நேற்றுக்காலை 9.30 மணி அளவில் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கவுந்தப்பாடி போலீசார் விரைந்து சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ், இந்துசமய அறநிலையதுறை ஆய்வாளர் நித்தியா, பி.மேட்டுப்பாளையம் பெரியமாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலரும் மற்றும் கோவில் பூசாரியுமான சடையப்பன், பி.மேட்டுப்பாளையம் முடிதிருத்தும் சங்க தலைவர் செல்வன் மற்றும் பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜா சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதியம் 1.30 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.