;
Athirady Tamil News

தயாசிறி எம்.பியும் சீ.ஐ.டிக்கு சென்றார் !!

0

பாரிய பண மோசடி குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெயர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமை குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்பியுமான தயாசிறி ஜயசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சீ.ஐ.டி) இன்று (10) முறைப்பாடு பதிவு செய்தார்.

சமூக ஊடகங்கள் ஊடாக தமது பெயர்களை உரிய பெயர் பட்டியலில் சேர்த்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதேவேளை, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான உதய கம்மன்பில, மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சீ.ஐ.டியில் நேற்று (09) முறைப்பாடு செய்திருந்தார்.

அந்தப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள எம்.பிக்களான தயாசிறி ஜயசேகர, சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே மற்றும் தான் ஆகிய நால்வருமே கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக வர்த்தக மையத்தின் 34ஆவது மாடியில் அலுவலகம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை முதலீடுகளாகப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், சீ.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்ட திலினி பிரியமாலியை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார்.

226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றை அவர் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனது அலுவலகத்தை அண்டிய பல வர்த்தகர்களுடன் நட்பாக பழகி அதிக வருமானம் தருவதாக கூறி வர்த்தகர்களிடம் பணம் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

சந்தேகநபரின் வர்த்தகத்தில் முதலீடு செய்ய பிரபல அரசியல்வாதியொருவரும் பணம் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.