;
Athirady Tamil News

முலாயம் சிங் யாதவ் மரணம்: ஜனாதிபதி, பிரதமர்- தலைவர்கள் இரங்கல்..!!

0

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு மாதம் அனுமதிக்கப்பட்டார். கடந்த 1-ந்தேதி இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளுடன் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 8.16 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். மத்திய மந்திரி அமித்ஷா, மருத்துவமனைக்கு சென்று முலாயம் சிங் யாதவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவரது உடல் மருத்துவமனையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான சைபாய் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. நாளை (11-ந்தேதி) பிற்பகல் 3 மணியளவில் இறுதி சடங்கு நடக்கிறது. அதன்பிறகு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. முலாயம் சிங் மறைவையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார். மேலும் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். முலாயம் சிங் யாதவ் கடந்த 1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா அருகே சைபாய் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

மல்யுத்த வீரரான அவர் 1967-ம் ஆண்டு ராம் மனோகர் லோகியாவின் சன்யுக்த் சோசலிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 1968-ம் ஆண்டு பாரதிய கிராந்தி தளம் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு பல்வேறு கட்சிகளில் இணைந்த அவர் பின்னர் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 1977-ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சர் ஆனார். 1985-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். அவர் கடந்த 1992-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ் வாடி கட்சியை தொடங்கினார். அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டு பலமுறை வெற்றி பெற்று உள்ளது. ஆனால் அவர் கட்சி தொடங்கும் முன்பே சந்திரசேகரின் ஜனதா தளம் கட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதல் முறையாக 1989-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி ஆனார்.

ஆனால் 1991-ம் ஆண்டு காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அவரது அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு தனிக்கட்சி தொடங்கிய பிறகு 1993-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று 2-வது முறையாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி ஆனார். பின்னர் 2003-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். அவர் 3 முறை முதல்-மந்திரி பதவியை வகித்துள்ளார். மேலும் 10 முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோரின் மந்திரி சபையில் முலாயம் சிங் யாதவ் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

மைன்புரி, அசம்கர் தொகுதிகளில் 7 முறை எம்.பி.யாகவும் பதவி வகித்து உள்ளார். முலாயம் சிங்குக்கு ஒரு முறை பிரதமராகும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அது கடைசி நேரத்தில் கைநழுவி போனது. முலாயம் சிங்கை அவரது ஆதரவாளர்கள் நேதாஜி என்று அன்போடு அழைத்தனர். முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் ஏற்கனவே உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். தற்போது அவர் சமாஜ் வாடி கட்சியின் தலைவராக இருக்கிறார். முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் இரங்கல் செய்தியில், “முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதரணமானவை” என்று கூறி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து விடா முயற்சியுடன் சேவை செய்தவர் முலாயம் சிங் யாதவ். உத்தரபிரதேச அரசியலில் தனித்துவம் மிக்கவராக திகழ்ந்த முலாயம் சிங் யாதவ் எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தார். பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த போது வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதேபோல் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு மத்திய மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.