;
Athirady Tamil News

மைத்திரியின் மனு: நாளை பரிசீலனை !!

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தனக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவின் பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம், நாளைய தினத்துக்கு (11) ஒத்திவைத்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு இன்று (11) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் கால அவகாசம் கோரிய காரணத்தால், நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இந்த மனுவை இன்று (10) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு நீதியரசர்கள் குழாம், கடந்த 6ஆம் திகதியன்று தீர்மானித்த போதும் சட்டமா அதிபரின் கோரிக்கையால், நாளை (11) பரிசீலிக்கப்படவுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் உத்தரவை இரத்துச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் கோரியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஏற்கவியலாத சாட்சியங்கள் மற்றும் செவிவழிச் சாட்சியங்களை கருத்திற்கொண்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகவும் தனது விருப்புரிமை அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த கோட்டை நீதவான் தவறிவிட்டார் என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நோட்டீஸ் பிறப்பிக்கும் முன்னர், தனியார் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் சட்டத் தேவைகளை நீதித்துறைசார் ரீதியில் மதிப்பீடு செய்ய தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜேசுராஜ் கணேசன் ஆகியோர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

கொலை வரம்பில் வராத மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு சமமான கவனமற்ற செயலை செய்து பலரின் உயிரிழப்பை ஏற்படுத்தியத்தியமைக்கு, தாக்குதல் தினத்தன்று பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதியே பொறுப்பு என்று மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.