;
Athirady Tamil News

உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை- ஜெர்மனி நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

0

நாடு முழுவதும் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இதற்காக வெளிநாட்டு உர நிறுவனங்களுடன் இந்திய உர நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் ராஷ்டிரிய ரசாயன உர நிறுவனமும், ஜெர்மனியின் கே.பிளஸ்.எஸ்.நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த புரிந்துணரவு ஒப்பந்தத்திற்கு ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி பகவந்த் குபா அப்போது உடனிருந்தார்.

இந்த ஒப்பந்தம், கலப்பு உரங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு எம்.ஓ.பி. உரம் கிடைப்பதை மேம்படுத்தவும் வகை செய்கிறது. உர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் நீண்டகால நட்புறவுக்கும் வழிவகை செய்கிறது.

மேலும் உரம் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நம்பியிருக்கும் இந்தியா, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், நிலையான விலையை பராமரிக்கவும் இது உதவும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கே.பிளஸ்.எஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாசியம் உரங்களை 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை சப்ளை செய்யும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.