;
Athirady Tamil News

உடல் உறுப்பு தானம் செய்த நடிகர்- மாணவி குடும்பத்தினருடன் ராகுல்காந்தி பாதயாத்திரை..!!

0

சோனியா காந்தி
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணித்து கேரளாவுக்கு சென்றது. அங்கு 19 நாட்கள் நடைபெற்ற பிறகு அந்த பாதயாத்திரை கடந்த மாதம் 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கட்சியின் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு வழியாக சித்ரதுர்காக்கு வந்தது. முன்னதாக மண்டியாவில் நடைபெற்ற பாதயாத்திரையின்போது, கடந்த 6-ந் தேதி சோனியா காந்தி அதில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

பாதயாத்திரை
நேற்று முன்தினம் ராகுல் காந்தியின் பாதயாத்திரை சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரேயில் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் அங்கு தங்கினார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் 35-வது நாள் மற்றும் கர்நாடகத்தில் 11-வது நாள் பாதயாத்திரை சல்லகெரேயில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. அங்கிருந்து நடைபயணம் கிரியம்மனஹள்ளி வரை 14 கிலோ மீட்டர் நீடித்த நிலையில் 11 மணிக்கு ராகுல் காந்தி ஓய்வு எடுத்தார்.

பின்னர் மாலை 4 மணிக்கு பாதயாத்திரை அங்கிருந்து தொடங்கியது. ஹீரேஹள்ளி வரை 9.3 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நீடித்தது. அதன் பிறகு ராகுல் காந்தி மாலை நேர ஓய்வு எடுத்தார். அந்த ஓய்வுக்கு பிறகு பாதயாத்திரை 3.8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற நிலையில் விவேகானந்தா நேஷன் பள்ளி பகுதியில் நிறைவடைந்தது.

உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் இறந்த நடிகர் சஞ்சாரி விஜய், சிக்கமகளூருவை சேர்ந்த மாணவி ரக்‌ஷிதா, உப்பள்ளியை சேர்ந்த வேதா மஞ்சுநாத் ஆகியோரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அவர்களின் குடும்பத்தினர் பாதயாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டனர். உடல் உறுப்புகள் தானத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அந்த குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர். பாரத் யாத்ரீகர்கள் 30 பேர் பாதயாத்திரையில் கலந்து கொண்டு, தங்களின் கண்களை தானம் செய்தனர். அவர்கள் அனைவரும் கண்களை தானம் செய்ததற்கான சான்றிதழுடன் ராகுல் காந்தியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் அவர்கள் ராகுல் காந்தியுடன் நடைபயணமாக வந்தனர். நேற்று நடைபெற்ற பாதயாத்திரை முழுவதும் சித்ரதுர்காவில் மட்டுமே நடைபெற்றது.

செல்பி புகைப்படம்
பாதயாத்திரையின்போது, விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். குழந்தைகள் பலர் ஆர்வமாக வந்து ராகுல் காந்தியுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு பாதயாத்திரை மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.