;
Athirady Tamil News

கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் கர்நாடக மாநிலம் பல்லாரியை வந்தடைந்தது. 1000 கிலோ மீட்டர் மைல்கல்லை ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்திருந்த நிலையில், பல்லாரி டவுனில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பாதயாத்திரையில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்பை படிக்க இருப்பதாக சொன்னார்கள். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்குமா? என்று நான் கேட்டால், இல்லை என்று பதில் சொன்னார்கள்.

2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவதாக பா.ஜ.க.வினர் கூறினார்கள். நாட்டில் 2½ லட்சம் அரசு வேலை காலியாக உள்ளது. நாட்டில் 12½ கோடி பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலை இருக்கிறது. கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது.

இங்கு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்றால் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும். பணம் இருந்தால் அரசு வேலையில் சேரலாம். பணம் இல்லாத ஏழைகள், வேலை வாய்ப்பற்றவர்களாகவே இருக்க வேண்டும். அரசு வேலையில் சேரவேண்டும் என்றால் லஞ்சம் கொடுத்தே தீர வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த அரசு 40 சதவீத கமிஷன் அரசாகும்.

ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் 40 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக தற்போது நாடு முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் முன்பு ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது, ரூ.1,000-மாக உயர்ந்து விட்டது. கர்நாடகத்தில் என்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு, நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.