;
Athirady Tamil News

இறுதி மூச்சு வரை கடலட்டை பண்ணைக்கு எதிராக குரல் கொடுப்போம்!!

0

‘எங்களைக் கொலை செய்ய முற்பட்டாலும், எங்கள் உயிர் இருக்கும் வரை எமது கடல்பகுதியில் நெக்டா நிறுவனத்தின் அனுமதியோடு சட்டவிரோதமாக இடம்பெறும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்’ என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அ.அன்னராசா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

படகுப் போக்குவரத்துக்கும் கடல் நீரோட்டத்திற்கும் குடாப்பரப்புகளில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள் எமக்கு இடையூறாக இருக்கின்றது என்பதை எம்மால் நிரூபிக்க முடியும்.

தென்னந்தோப்பில் நின்று கொண்டு கடற்றொழில் அதிகாரிகள் கூறுவதை எம்மாலே ஏற்றுக் கொள்ள முடியாது.

கடலட்டை பண்ணையால் பாரம்பரிய மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக நெக்டா திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நிருபராஜ்க்கு நாம் மகஜரொன்றினை கையெழுத்திருந்தோம்.

இதுவரை அந்த மகஜருக்கு எந்தவித பதிலும் தரப்படவில்லை.இந்த நிலையில் நாம் ஊடகங்கள் வாயிலாக எமது கருத்துக்களை தெரிவிக்கின்றோம்.

நாம் ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கின்ற கருத்துக்களை வைத்து எம்மை அச்சுறுத்தலாம் என்றோ, அடக்கலாம் என்றோ அதிகாரிகள் நினைப்பார்களேயானால் கடற்றொழில் சமூகம் வெகுண்டெழும் என்பதை தெரிவிக்கின்றோம்.

கடலட்டை பண்ணை தொடர்பாக நாங்கள் கூறும் கருத்து பொய்யானால் தென்னந்தோப்புக்குள் நின்று கதைக்காமல் பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன் விவாதத்துக்கு வாருங்கள்.

ஜம்பது வருடங்களுக்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் கடலட்டை பிடித்து பதப்படுத்தி வியாபாரம் செய்த உள்ளூர் வியாபாரிகள் இருக்கின்றார்கள்.

அதனால் கடற்சூழலுக்கோ கடற்றொழிலாளர்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் தற்போது கடலட்டை குஞ்சுகளை பிடித்து பண்ணை அமைத்து செயற்கையாக இனப்பெருக்கக்கம் செய்யலாம் என கூறுகிறீர்கள்.

இயற்கையாக கிடைக்கும் வளத்தை அளவோடு பெறமுடியும். அளவுக்கதிகமாக ஆசைப்பட்டு இயற்கை வளத்தையும் அழிப்பதாகவே முடியும்.

அண்மையில் தீவகப் பகுதிக்கு சென்ற கடற்றொழில் அமைச்சரிடம் பருத்தித்தீவில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணை தொடர்பாக பொதுமக்களால் கேள்வியெழுப்பபட்டது. இதன்போது நெக்டா உதவிப்பணிப்பாளரிடம் அந்த பண்ணை தொடர்பாக ஆய்வு செய்யுமாறு கடற்றொழில் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

பருத்தித்தீவு கடலட்டை பண்ணை யாருக்கு சொந்தம் எனவும் தெரியவில்லை. அதற்கு சட்ட ரீதியான அனுமதியும் வழங்கப்படவில்லை.

அதிகாரிகளுக்கு துணிவு இருந்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பருத்தித்தீவு கடலட்டைப் பண்ணையை அகற்றுங்கள். அதை விடுத்து விட்டு துறைசார்ந்த அதிகாரிகளே எங்களை அச்சுறுத்துவதற்கு முயற்சிக்காதீர்கள்.

எங்களைக் கொன்றாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை எமது கடல்பகுதியில் நெக்டா நிறுவனத்தின் அனுமதியோடு சட்டவிரோதமாக இடம்பெறும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம். மிரட்டும் வரை மிரட்டுங்கள் சாவுக்கும் தயங்கமாட்டோம்.

சர்வதேச நாடுகளின் போட்டிக்கு வடக்கு கடற் பகுதி பலியாகின்றது. இந்தியாவாக இருக்கலாம் சீனாவாக இருக்கலாம் அமெரிக்காவாக இருக்கலாம் அதனை நிறுத்த வேண்டும்.

எந்த நாடுகளும் எமக்கு உதவி செய்வதாக இருந்தாலும் வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அந்த உதவியை செய்ய வேண்டும்.

நாம் வளர்ப்பு திட்டத்தை நூறு வீதம் எதிர்க்கவில்லை. உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவித்துக் கொண்டு அதனைப் பாதிக்காத வகையில் வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகின்றோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.