;
Athirady Tamil News

கேரளாவில் நிர்வாண பூஜை நடத்தி 2 பேரை கொன்ற மந்திரவாதியால் மேலும் ஒரு பெண் நரபலி..!!

0

கேரளாவில் தமிழக பெண் பத்மா உள்பட 2 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் பத்மாவின் செல்போனில் கடைசியாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்தான் பத்மாவை கொலை செய்தது தெரியவந்தது. எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அவரது பெயர் முகமது ஷபி. மந்திரவாதியான இவர் பத்தினம்திட்டா, இலத்தூரில் மசாஜ் வைத்தியம் செய்து வந்த பகவல் சிங், அவரது மனைவி லைலாவுடன் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பு கடத்தியதாகவும், அவரை இலத்தூர் வீட்டிற்கு அழைத்து வந்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்ததாக தெரிவித்தனர். பின்னர் பத்மாவை கடந்த மாதம் இதுபோல கடத்தி வந்து அவரையும் நரபலி கொடுத்ததாக கூறினர். அடுத்தடுத்து 2 பெண்கள் நரபலி கொடுத்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை 12 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் 3 பேரிடமும் தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்ட தகவல் வெளியானது. மேலும் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து அதனை பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் இலத்தூர் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பிரிட்ஜில் இருந்த நரமாமிசத்தை கைப்பற்றினர். அவற்றை ஆய்வுக்கு அனுப்பிய போலீசார், டி.என்.ஏ. பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே இலத்தூர் பகவல் சிங் வீட்டிற்கு முகமது ஷபி சில மாணவிகளை அழைத்து வந்தது தெரிய வந்தது. அந்த மாணவிகள் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள்.

அவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் முகமது ஷபியின் கைகளில் இருந்து 2 பெண்கள் தப்பியதாக தகவல் வெளியானது. இதில் ஒரு பெண் இலத்தூர் வீடு வரை சென்று அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும், இன்னொரு பெண், முகமதுஷபி அழைத்தும் அவருடன் செல்ல தாமதம் காட்டியதால் தப்பிய விபரமும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கைதான பகவல் சிங்கின் மனைவி லைலாவை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.

அந்த பெண்ணை நரபலி கொடுத்து அவரது உடல் உறுப்புகளை நல்ல விலைக்கு விற்றதாக முகமது ஷபி கூறியதாக லைலா போலீசாரிடம் கூறினார். மேலும் அந்த பெண் யார்? எப்போது அவர் கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார். இதுபற்றி போலீசார் உடனடி விசாரணை மேற்கொண்டனர். அதில் உடல் உறுப்புகள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பகவல் சிங்கை நம்பவைக்கவே முகமது ஷபி இதுபோன்று கூறியிருக்கலாம் எனவும் போலீசார் கூறினர். கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ், இதுபற்றி கூறும்போது, இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். எங்களின் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அதுபற்றிய விபரங்கள் கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.