;
Athirady Tamil News

ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி..!!

0

மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டம், பலூர்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு கடந்த 17-ம் தேதி காலை 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். ரத்த வங்கியில் கனாக் குமார் தாஸ் என்பவரிடம், தான் ரத்ததானம் செய்ய உள்ளதாகவும், அதற்காக தனக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதை கேட்டதும் குமார் தாசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் சிறுவர் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.

அந்த சிறுமி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், 12ம் வகுப்பு படிப்பதும் தெரியவந்தது. அவரால் ஸ்மார்ட்போனை காசு கொடுத்து வாங்க முடியாததால் ரத்தத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் போனை வாங்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோரை அழைத்து சிறுமி குறித்த தகவல்களை அதிகாரிகள் கூறி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகள் வீட்டை விட்டு சென்ற போது நான் வீட்டில் இல்லை. ரத்தத்தை விற்றால் பணம் கிடைக்கும் என்ற யோசனை அவருக்கு எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை என்றார்.

சிறுமியின் தந்தை காய்கறி வியாபாரி, தாய் இல்லத்தரசி. சிறுமிக்கு 4 ஆம் வகுப்பில் படிக்கும் தம்பி உள்ளார். அந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் கவுன்சலிங் வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது தம்பியின் சிகிச்சைக்காக தான் எனது ரத்தத்தை விற்க வந்ததாக தெரிவித்தார். பின்னர் தன்னுடைய உறவினரின் செல்போனில் இருந்து ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்ததாகவும் அதற்கு கேஷ் ஆன் டெலிவரிக்கு பணம் கொடுக்க ரத்தத்தை விற்க வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த போனின் விலை ரூ 9 ஆயிரம் என்றும் அதை ஞாயிற்றுக்கிழமை ஆர்டர் செய்ததாகவும் வியாழக்கிழமை டெலிவரி கிடைத்து விடும் என்றும், பெற்றோரிடம் பணம் இல்லாததால் எனது ரத்தத்தை விற்று பணம் செலுத்தலாம் என வந்தேன் என்றார். இவர் கூறுவதை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள், அவருக்கு கவுன்சிலிங் வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.