;
Athirady Tamil News

ஆம்புலன்சும் இல்லை… கையில் பணமும் இல்லை: சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பஸ்சில் சென்ற உறவினர்..!!

0

மத்தியபிரதேச மாநிலம் சட்டார்பூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 4 வயது சிறுமி இறந்தார். ஆம்புலன்சு வசதி இல்லாததால் அந்த சிறுமி உடலை உறவினர்கள் தோளில் சுமந்து எடுத்து சென்றனர். இது அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல அங்கு மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பதான் என்ற கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது உறவினர் அந்த குழந்தையை சட்டார்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அந்த குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது.

இதையடுத்த குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு ஆம்புலன்சு மூலம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உறவினர் முடிவு செய்தார். ஆனால் ஆம்புலன்சு எதுவும் கிடைக்கவில்லை. தனியார் வாகனத்தில் எடுத்து செல்ல அவரிடம் பணவசதி இல்லை. இதனால் அவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் மனதை திடப்படுத்திக்கொண்டு பஸ்சில் செல்லலாம் என நினைத்தார். சிறுமியின் உடலை துணியால் மூடி தனது தோளில் தூக்கிக்கொண்டு ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள ரோட்டில் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தே சென்றார்.

தன் ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார். ஆனால் பஸ்சில் டிக்கெட் எடுக்க கூட அவரிடம் போதுமான அளவு பணம் இல்லை. தனது நிலையை பஸ்சில் இருந்த பயணிகளிடம் கூறினார். அவர் மேல் இரக்கம் காட்டிய சக பயணிகள் பணம் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அவர் குழந்தை உடலை தோளில் சுமந்தவாறு பஸ்சில் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்றார். இந்த காட்சிகளை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.