;
Athirady Tamil News

2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.80 லட்சம் கோடியை எட்டும் – ராஜ்நாத்சிங் நம்பிக்கை..!!

0

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடந்து வருகிறது. அதில், ‘பாதுகாப்பு துறையில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:- தனியார் துறையினர், இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அவர்கள் என்ன பிரச்சினையாக இருந்தாலும், அதை களைய என்னையோ, ராணுவ அமைச்சக அதிகாரிகளையோ தயக்கமின்றி சந்திக்கலாம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆகியவையும் பாதுகாப்பு துறையுடன் கைகோர்த்து செயல்படுகின்றன. இது, பாதுகாப்பு துறைக்கு ஒரு பொற்காலம்.

உள்நாட்டு உற்பத்தி
தற்போது, உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 12 பில்லியன் டாலராக (ரூ.98 ஆயிரத்து 400 கோடி) உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள், இதை 22 பில்லியன் டாலராக (ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 400 கோடி) உயர்த்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த இலக்கையும் தாண்டக்கூடும். பாதுகாப்பு துறையில் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. இத்துறையில் உலகத்தின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கி இந்தியா நடைபோடுகிறது. பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ராணுவ மந்திரிகள் பயம்
முன்பெல்லாம், இத்துறையில் தனியாருக்கு கதவு திறந்துவிடப்படவில்லை. முதலீட்டாளர்களில் யாராவது சுட்டுவிரல் நீட்டக்கூடும் என்ற பயத்தில், அவர்களை சந்திப்பதை ராணுவ மந்திரிகளும், அதிகாரிகளும் தவிர்த்து வந்தனர். எங்களுக்கு அந்த பயம் இல்லை. எங்கள் கதவுகள் முதலீட்டாளர்களுக்கு திறந்தே இருக்கின்றன. பாதுகாப்பும், வளர்ச்சியும் எதிர் எதிர் துருவங்களாக கருதப்பட்டன. சமூக-பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், நமது பாதுகாப்பு திறன்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த எண்ணத்தில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது. இரண்டிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.