;
Athirady Tamil News

நிலக்கரி விலைமனு விவகாரம்: மனு வாபஸ் !!

0

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான சந்தேகத்துக்குரிய விலைமனுக் கோரலை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, பிளக் சாண்ட்ஸ் கமோடிடீஸ் நிறுவனத்துக்கு விலைமனு வழங்க, அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனுவை ஓமல்பே சோபித தேரர், இன்று (25) வாபஸ் பெற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிளக் சாண்ட்ஸ் கமோடிடீஸ் நிறுவனத்திடம், லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கான 4.5 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரியை கொள்வனவு செய்ததற்காக அனுமதிக்கு தடை விதிக்குமாறு கோரி ஓமல்பே சோபித தேரர் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பிளக் சாண்ட்ஸ் கமோடிடீஸ் நிறுவனத்துக்கு சந்தேகத்துக்குரிய நிலக்கரி விலைமனு வழங்கப்பட்டுள்ளமை பொது களத்தில் இருந்து தனது சேவைபெறுநருக்கு தெரியவந்துள்ளதாக தேர்தல் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மன்றுக்கு தெரியப்படுத்தினார்.

எனினும்,அமைச்சரவை அந்த விலைமனுவை இரத்து செய்துள்ளதாகவும் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான புதிய விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றுக்கு அறிவித்தது.

எனவே, புதிய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மனுவைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதை வாபஸ் பெறுவதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரிநின்றார்.

விடயங்களைக் கருத்திற் கொண்ட பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய அடங்கிய நீதியரசர்கள் குழாம், மனு தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள தீர்மானித்தது.

பிளக் சாண்ட்ஸ் கமோடிடீஸ் நிறுவனத்துக்கு நிலக்கரி விலைமனுவை வழங்குவதற்கான சிறப்பு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட கொள்வனவு குழுவின் தீர்மானத்தையும் அதைத் தொடர்ந்து அமைச்சரவை வழங்கிய அனுமதியையும் மனுதாரர் சவாலுக்கு உட்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.