;
Athirady Tamil News

ஷாருக்கான், சல்மான்கான், ரன்பீர்கபூர் பெயரில் ரூ.5 லட்சம் வரை கழுதைகள் விற்பனை..!!

0

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகுட் மாவட்டம் மந்தாகினி நதிக்கரையில் புந்தேல்கணிட் பகுதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு கழுதை சந்தை நடைபெறும். கடந்த 3 நாட்களாக இங்கு கழுதை சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் சுமார் 15 ஆயிரம் கழுதைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை ரூ.1000 முதல் ரூ.5 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. இந்த கழுதைகளை வாங்கவும், விற்கவும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். நேபாளத்தில் இருந்தும் வியாபாரிகள் கழுதைகளை கொண்டு வந்தனர். வியாபாரிகள் பலர் தங்கள் கழுதைகளுக்கு இந்தி நடிகர்களின் பெயர்களை வைத்திருந்தனர். இந்தி நடிகர் ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டு இருந்த கழுதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது.

உயர்ரக கழுதை ஒன்றுக்கு சல்மான்கான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த கழுதை ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்றது. ஷாருக்கான் பெயரிடப்பட்ட கழுதை ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கழுதைகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கழுதைகள் அதிகபட்சமாக ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த கழுதை சந்தையில் ரூ.2 கோடி வரை விற்பனையாகி உள்ளது. வட மாநிலங்களில் கட்டிடப் பணிகளில் செங்கல், மணல், கருங்கற்கள் போன்றவற்றை சுமந்து செல்லவும், சலவை தொழிலுக்கு துணை மூட்டைகளை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே குதிரைகளை விட கழுதை உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதன் காரணமாக கழுதை சந்தையில் விற்பனை அமோகமாக நடந்தது. இதுகுறித்து கழுதை சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முன்னாலால் திரிபாதி கூறுகையில், “கழுதை சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒரு கழுதைக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறோம். இந்த சந்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு படையெடுத்த அவுரங்கசீப்பின் பல குதிரைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. எனவே குதிரைகளுக்கு மாற்றாக அவர் கழுதை வியாபாரிகளை வரவழைத்து சந்தையை தொடங்கினார். அதன் பிறகு கழுதை சந்தை இதுவரை நடந்து வருகிறது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.