;
Athirady Tamil News

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்..!!

0

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானை முகமாகவும், சிங்க முகமாகவும் அடுத்தடுத்து உருமாறி போரிடும் சூரபத்மனை முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்கிறார். பின்னர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தனது கொடியாகவும், வாகனமாகவும் ஆட்கொள்கிறார்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின்னர் சாயாபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடைபெறும். கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், பல்வேறு இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நெல்லை- திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு 580 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.