;
Athirady Tamil News

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்- 7 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!

0

உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் இன்று ( 3-ந்தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்றனர்.

பல வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்களைவிட பெண்கள் அதிகளவு திரண்டு இருந்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்பிறகு மின்னனு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது . வருகிற 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. முன்னனி நிலவரம் காலை 9 மணிக்கு வெளிவரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதம்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதல்வர் பஜன்லால் மகன் குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். இதையடுத்து இத்தொகுதியில் பாஜனதா சார்பில் பிஷ்னோய் மகன் பாவ்யா போட்டியிடுகிறார். அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த ரமேஷ் லத்கே மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதியில் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் ரமேஷ் வத்கே, அவரது மனைவி ரிதுஜா தாக்கரே களம் இறக்கப்பட்டு உள்ளார். இத்தொகுதியில் போட்டியில் இருந்து பா.ஜனதா விலகிவிட்டது. கோலாகோரக்பூர் தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ அரவிந்த் கிரி மரணம் அடைந்ததால் அவரது மகன் அமன்கிரி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டியிடாததால் பா.ஜனதா.

சமாஜ்வாடி இடையே கடும் போட்டி நிலவுகிறது. முனுகோடு தொகுதியில் தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் பிரபாகர் ரெட்டி போட்டியிடுகிறார். இங்கு பாரதீய ஜனதா சார்பில் ராஜகோபால் களம் இறக்கப்பட்டு உள்ளார். இத்தொகுதியில் 2 கட்சிகளுக்கும் இடையே பலத்த போட்டி உருவாகி இருக்கிறது. தாம்நகர் தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த பிஷ்ணு சரண் சேத்தி மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் அவரது மகன் சூர்யபன்ஷி சுராஜ் போட்டியிடுகிறார். ஆளும் பிஜூ ஜனதாதளம் சார்பில் பெண் வேட்பாளர் அபந்தி தாஸ் போட்டியில் உள்ளார். பீகார் மாநிலத்தில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. மோகாமா தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக சோனம் தேவியும். ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் நீலம் தேவியும் களத்தில் உள்ளனர். கோபால் கஞ்ச் தொகுதியில் மறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ சுபாஷ் சிங் மனைவி குசும் தேவி போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆர். ஜே.டி சார்பில் மோகன் குப்தா போட்டியில் உள்ளார். பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் விலகிய பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது பாரதீய ஜனதா கட்சிக்கு பலப் பரீட்சையாக பார்க்கப்படுகிறது. இந்த 2 தொகுதி இடைத்தேர்தல் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கடும் சவாலாக இருக்கும் என தெரிகிறது. இன்று தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளில் பாரதீய ஜனதா 3 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் தாக்கரே தலைமையிலான, சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றதாகும். வருகிற 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் 6 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.