;
Athirady Tamil News

எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் – பாஜகவுக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட சந்திரசேகர ராவ்..!!

0

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து போலீசார் ஐதராபாத் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது.எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும். இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன். ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதலமைச்சர்களை மாற்ற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது.இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்து விட்டது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.