;
Athirady Tamil News

ஆம் ஆத்மிக்காக ரூ.500 கோடி திரட்டுமாறு கெஜ்ரிவால் கூறினார்: சுகேஷ் சந்திரசேகர்..!!

0

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி துணை நிலை கவர்னருக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மற்றும் திகார் சிறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். சிறையில் தனது பாதுகாப்புக்கு டி.ஜி.பி. ரூ.12.50 கோடி பெற்றதாகவும், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், கவர்னருக்கு கடிதம் எழுதியதால் சத்யேந்தர் ஜெயின் மற்றும் முன்னாள் டி.ஜி.பி.யால் தான் மிரட்டப்படுவதாக தனது வக்கீலுக்கும், ஊடகங்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீதும் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.500 கோடி திரட்டுமாறு கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை ‘குண்டர்’ என்று கூறிய கெஜ்ரிவாலை ‘மகா குண்டர்’ என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். சுகேஷ் சந்திரசேகரின் இந்த கடிதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியுள்ளார். டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட்டின் பண்ணை வீட்டில் வைத்து சுகேஷ் சந்திரசேகரை கெஜ்ரிவால் சந்தித்தது உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மந்திரி சத்யேந்தர் ஜெயினை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். ஆம் ஆத்மிக்கு பணம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என கூறியுள்ள டெல்லி பா.ஜனதா தலைவர் அதேஷ் குப்தா, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. “குஜராத் மற்றும் டெல்லி உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயம் காரணமாக பா.ஜனதா ஒரு குண்டரை ஆம் ஆத்மிக்கு எதிராக ஒப்பந்தம் செய்துள்ளது” என டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.