;
Athirady Tamil News

இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘AHEAD’ செயற்திட்டத்தின் நிதி அனுசரணையுடன் இவ்வாண்டுக்கான ‘இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு – 2022’ இடம்பெறவுள்ளது.

இதன் முதலாவது மாநாடு கடந்த 2021 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 10ஆம் திகதி ‘சமத்துவம், சமநீதி, மற்றும் அபிவிருத்திக்கான மனிதப்பண்பியலும் சமூக விஞ்ஞானங்களும்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீட்சியாக எதிர்வரும் வியாழக்கிழமை இரண்டாவது ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நடைபெறவுள்ள ஆய்வரங்கானது, “பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளிடையே வழமைக்கு திரும்புதலும் மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புதலும்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலைமையில் நடைபெறவுள்ள இவ் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதுடன் திறவுரையினை கொழும்புப் பல்கலைக்கழகப் பொருளியல்துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் ‘இலங்கையின் தற்போதய பொருளாதார நெருக்கடி’ எனும் கருப்பொருளில் மேற்கொள்ளவுள்ளார்.

இவ் ஆய்வு மாநாட்டுக்கென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களிடமிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலமைந்த ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்ட்டு, அவற்றிலிருந்து 125 ஆய்வுக் கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட குறித்த எட்டு ஆய்வுத் தடங்களில் ஆய்வாளர்களால் அளிக்கை செய்யப்படவுள்ளன. இந்த ஆய்வுத் தடங்களை துறைசார் பேராசிரியர்கள் தலைமையேற்று நடத்தவுள்ளனர்.

இந்த மாநாட்டில் அளிக்கை செய்யப்படும்; ஆய்வுக்கட்டுரைகள் வரலாறு மற்றும் பண்பாட்டு மேம்பாடு, அனர்த்த முகாமைத்துவம், தொல்லியல் மற்றும்; பண்பாட்டு பல்வகைமை, உணவும் போசாக்கும், வறுமை மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை, மனித உரிமைசார் பிரச்சினைகள், ஊடகமும் சமூகமும், ஒழுக்கவியலும் மானிட வாழ்வும், மொழி, இலக்கியம், மற்றும் மொழிபெயர்ப்பு, பால்நிலையும் மேம்பாடும், இனத்துவமும் மோதல் தீர்வும், சுகாதாரமும் நல்வாழ்வும், சமூக-பொருளாதார சமத்துவமின்மையும் நீதியும், நல்லிணக்கமும் நிலைமாறு கால நீதியும், பொருளாதாரப் நெருக்கடியும் இலங்கைச் சமூகமும், சட்டமும் ஒழுங்கும், சமகால சமூகத்தில் சமயம், கோவிட் – 19 பெருந்தொற்றும் இலங்கைச் சமூகமும், வேறுபட்ட பண்பாடுகளில் அழகியல், சமூகமாற்றமும் சமகால சமூக பிரச்சினைகளும், சமுதாய தாங்குதிறன், சமுதாய மேம்பாடும் பிராந்தியத் திட்டமிடலும், கல்வியும் சமூகமும், மற்றும் காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் எனப் பல்வேறு உப தலைப்புக்களை அடியொற்றி அமைந்துள்ளது.

ஆய்வரங்கில் பங்குபற்றி பயன் பெறுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம், ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.