;
Athirady Tamil News

மக்களை இம்சிக்க வேண்டாம் – சுரேஸ்!!

0

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின் பின்னரே போதைப்பொருள் பாவணை அறிமுகமானது.

அந்த நிலையில் தான் தற்போது இராணுவத்தினர் புதிதாக சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மீண்டும் வீதி சோதனை சாவடிகளை அமைத்து மீண்டும் அவர்களை வீதிகளில் இறக்கி சோதனைகளுக்கு உட்படுத்துவது என்பது அவர்களை மீண்டுமொரு முறை யுத்தகால நெருக்கடிக்குள் தள்ளுவதாகும்.

கொழும்பில் பெருமளாவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. ஆனால் அங்கு வீதிச்சோதனை சாவடிகளை அமைத்து , வீதியில் செல்வோரை வழி மறித்து, சோதனை செய்ய முடியுமா ? அவ்வாறு இல்லாத போது ஏன் யாழ்ப்பாணத்தில் மட்டும் இந்த நிலமை?

போதைப்பொருள் கடல் வழியாகவே கடத்தப்படுகின்றது. அவற்றை தடுக்க முழு முயற்சிகளையும் எடுக்கலாம். பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் போது, எவரும் கைது செய்யப்படவில்லை இது எமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்து கின்றது.

அதேவேளை போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கு தகவல் வழங்கும் போது, அது போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு தெரியவருகிறது. இதனால் தகவல் தெரிந்தோர் அதனை அறிவிக்க அச்சம் கொள்கின்றனர்.

வடமாகாண ஆளுநர் போதைப்பொருள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளாது, தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதனை தவிர்க்க வேண்டும்.

எனவே போதைப்பொருளை கட்டுப்படுத்த வெறுமனே பிரதான வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து, மக்களை சோதனை சாவடிகளில் இறக்கி ஏற்றி சோதனை செய்து கட்டுப்படுத்த முடியாது.

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளை தவிர்த்து ஒழுங்கைகள் , உள் வீதிகள் ஊடாக பயணிக்க முடியும். அவ்வாறு இருக்க பிரதான வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கட்டுப்படுத்துகிறோம் என மக்களை இம்சிக்க வேண்டாம் என கோருகிறோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.