;
Athirady Tamil News

யாழ்ப்பாண விமான நிலையத்தை இயக்க அரசாங்கம் விரும்பவில்லை!!

0

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இயக்க அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லை என்பதே உண்மை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் , அதனை இயக்குவதற்கு இந்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதே உண்மை.

விமான நிலையத்தில் இயக்கினால் , தென்னிந்தியாவில் இருந்து நேரடியாக வடக்குக்கு பலர் பயணம் செய்வார்கள் என்பதுடன் , கட்டுநாயக்காவில் இருந்து வீதி வழியாக சுமார் 08 மணிநேரத்திற்கு அதிக நேரம் செலவழித்து வடக்குக்கு வர வேண்டி இருப்பதனால் , புலம்பெயர் தேசத்தவர்களும் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக தமது பயணத்தை ஒழுங்கமைத்து கொள்வார்கள் என்பதால் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய வருமானம் அதிகரித்துவிடும் என்பதனாலேயே இதனை இயக்க விரும்பவில்லை.

விமான நிலையத்தை புனரமைக்குமாறு இந்தியா வழங்கிய 300 கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை. கடந்த மூன்று வருடங்களில் எந்த புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றே அறிகிறோம்.

அது மாத்திரமன்றி விமான நிலையத்தில் இருந்த தொழிநுட்ப உபகரணங்கள், தளபாடங்கள் உள்ளிட்டவை தெற்கு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன என அறிகிறோம்.

வரி சலுகை , சேவை கட்டண சலுகை என பல சலுகைகளை வழங்கியும் மத்தள விமான நிலையத்திற்கு எந்த விமானமும் வாராத போதிலும் , யாழ்ப்பாண விமான நிலையத்தில் வசதிகள் எதனையும் செய்யாது , கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் ஒத்த வரிகள் சேவை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இவ்வாறான அதிகரித்த வரிகள் , கட்டணங்கள் , வசதிகள் அற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் தான் விமான சேவைகளை நடத்த விமான சேவை நிறுவனங்கள் முன் வரவில்லை.

சலுகைகளை அறிவித்து , ஓடு பாதைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி , விமான நிலைய வசதிகளை அதிகரித்தாலே விமான சேவைகளை விமான சேவை நிறுவனங்கள் முன்னெடுக்க முன் வரும். அதனை விடுத்து விமான சேவைகளை நடாத்த யாரும் முன் வரவில்லை என கூறிக்கொண்டு இருக்க கூடாது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.