;
Athirady Tamil News

யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு; சட்டத்தரணி மற்றும் முன்னாள் அதிபர் கைது!!

0

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது.

அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.

பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் வழக்கு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

அப்போது தமது புலன்விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையை பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது.

மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று மன்று கேள்வி எழுப்பியது.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்பிற்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டளை ஒன்றை வழங்கிய மேலதிக நீதிவான் வழக்கு நடவடிக்கைகளின் பதிவு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை வெள்ளிக்கிழமை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.