;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் ஜி-20 மாநாடு: இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சந்திக்கிறார் பிரதமர் மோடி..!!

0

ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக செல்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றும், சுகாதாரம் தொடர்பான 3 முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்க உள்ளார். ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார். அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதர நாடுகளின் தலைவர்களுக்கு மோடி இந்த மாநாட்டின்போது அழைப்பு விடுப்பார். அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபபர் இமானு வேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார். நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியில் பிரதமர் மோடி 45 மணி நேரம் செலவிட இருக்கிறார். அங்கு அவர் சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16ம் தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார். 3 நாள் பயணத்துக்குமுன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளேன். இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்படும் முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலகின் முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்ட மைப்பு ஜி-20 ஆகும். இதில் அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.