;
Athirady Tamil News

தொலைநோக்குடன் தேசிய இனப்பிரச்சினையை அணுகிய நாபாவை நினைவுகூர்வோம்!!

0

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் எழுபத்தியோராவது பிறந்ததினம் 19.11.2022 அன்று அனுட்டிக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடகச் செய்தி வருமாறு:

ஒவ்வொரு ஆண்டும் எமது செயலாளர் நாயகம் க.பத்மநாபா அவர்களின் பிறந்த தினத்தை தோழர்கள் தினமாக அனுஷ்டித்து வருகின்றோம். எமது தோழரின் பிறந்த தினமும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியும் ஒரே தினத்தில் வௌ;வேறு ஆண்டுகளில் பிறந்துள்ளனர். இருவரும் உலக அமைதிக்காகப் போராடி ஏகாதிபத்திய எதிர்ப்பின் காரணமாகவே உயிர்நீத்தவர்கள்.

தோழர் க.பத்மநாபா என்றவுடன் நன்றாக வடிவமைக்கப்பட்ட அவரது தாடியும் மேல்நோக்கி இழுக்கப்பட்ட அவரது முடியும் கவர்ந்திழுக்கும் அவரது காந்தக் கண்களும் மீசை, தாடிக்கு இடையே தவழும் சிரிப்பும்தான் அனைவரின் நினைவிற்கும் வரும். காலம் எமது மக்களுக்கான சிறந்த தலைவனை எம்மிடம் இருந்து பிரித்துவிட்டது. வாழும்போதே வரலாறு படைத்த எமது எஸ்ஜி தோழர் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றார். சிறந்த மனிதநேயர், அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் இயல்பு அதிலும் குழந்தைகளைக் கண்டால் அவர்களுடன் தானும் குழந்தையாக மாறிவிடும் பண்பு, அடுத்தமுறை அவரைக் கண்டால் அந்த குழந்தை மாமா என்று ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் கவர்ச்சி இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஒரு தலைவரை இனி பார்ப்பது கடினமே. அந்த ஒப்பற்ற மனிதரின் தலைமையில் நாம் பயணித்தோம் என்று நினைக்கையிலே நாம் பெருமை கொள்கிறோம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபர்களில் ஒருவரும் இறுதித்தருணம்வரை அதன் செயலாளர் நாயகமுமாகத் திகழ்ந்த எமது தோழர் க.பத்மநாபா அவர்கள் தொலைநோக்குடன் தேசியஇன விடுதலையை அணுகியவர். தேசிய இனவிடுதலையுடன் வர்க்கப் புரட்சியையும் இணைக்க வேண்டும் என்று கனவு கண்டார். இலங்கையில் வர்க்கப் புரட்சி வெற்றியடைந்தால் தேசிய இனப்பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பினார். அதற்காகவே தென்னிலங்கை ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும், இடதுசாரிக் கட்சிகளுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்தார்.

காடையர்களின் துணையுடன் அரச அனுசரணையுடன் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தொடர்ச்சியான அடக்குமுறைகளும் வன்முறைகளும் தென்னிலங்கையின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இடதுசாரிக் கட்சிகளையும் தமிழ் மக்கள்மீது அனுதாபம் கொள்ளச் செய்திருந்தன. அடக்குமுறையின் உச்சகட்டமாக நடந்தேறிய 1983 கறுப்பு ஜூலை தேசிய இனவிடுதலையை துரிதப்படுத்தியது. எனவே தேசிய இனவிடுதலையை முன்னெடுத்துக்கொண்டே வர்க்கப்போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தோழர் பத்மநாபாவும் ஏனைய தோழர்களும் எடுத்த முடிவை தமிழ்த் தேசிய இனத்தின்மீது கரிசனை கொண்டிருந்த அன்றைய தென்னிலங்கை அரசியல் சமூகமும் ஏற்றுக்கொண்டன. அதனால் அவர் இலங்கையில் கம்யூனிச ஆட்சியைக் கொண்டுவர முயற்சிக்கிறார் என்று அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசினால் குற்றம் சுமத்தப்பட்டு தேசத்துரோக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தன்னை பயங்கரவாதியாகச் சித்திரத்த அரசிற்கு எதிராக துணிச்சலுடன் செங்கோடன், சேரன், ரஞ்சன் என்ற பலபெயர்களுடன் தென்னிலங்கையிலும், மலையகத்திலும் இந்தியாவிலும் புரட்சிக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் அனைத்து சர்வதேச அமைப்புகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டங்களுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆதரவை வழங்கியதுடன் அவர்களது போராட்டங்களில் இலங்கையிலும் இந்தியாவிலும் பங்கெடுத்துக்கொண்டார். நிக்கராகுவா, பாலஸ்தீன விடுதலை இயக்கம், உள்ளிட்ட பல புரட்சிகர அமைப்புகளுடனும் ரஷ்யா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளுடனும் கட்சிரீதியான உறவைப் பேணிவந்தார்.
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு எத்தகைய முன்னேற்றத்தையும் அடைய முடியாது என்பதிலும் இந்துமகா சமுத்திரப் பிராந்தியத்திலும் புவிசார் அரசியலிலும் இந்தியாவின் வகிபாகம் மறுதலிக்க முடியாதது என்பதையும் எமது செயலாளர் நாயகம் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அன்றைய பனிப்போர் காலகட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பும் தமிழர்களின் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதில் உறுதியாக இருந்ததுடன், இந்தியாவின் சிறந்த நண்பராகவும் திகழ்ந்தார். இந்த அடிப்படையில் அவரது தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அன்று ஏற்றுக்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தின் கீழ் உருவான மாகாணசபை முறைமையையே இன்று முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசிய பரப்பில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கட்சிகளும் கோருகின்றன.

நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்றிருந்த வேளையில், இலங்கை அரசாங்கத்துடனும் இந்திய அரசாங்கத்துடனும் மாகாணசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டே பல்வேறு இன்னல்களின் மத்தியில் அதனை முன்னெடுத்துச் சென்றோம். குறுகிய காலப்பகுதிக்குள் எமக்குக் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு பல அரிய விடயங்களைச் செய்திருந்தோம் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அன்றைய பூகோள அரசியல் நிலைமையைப் போன்றே இன்றும் ஒரு அரசியல் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அன்று நாம் அரசியல் ரீதியிலும் ஆயுத ரீதியிலும் பலம்பெற்றிருந்தோம். இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சக்திகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்று விரிவடைந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பும் தமிழ் மக்களின் பாதுகாப்பும் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, எமது இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எமது பலம், பலவீனம் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு, எமது மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாக சமஷ்டி தீர்வை அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்த குரலில் கட்சி பேதமின்றி இதயசுத்தியுடன் வலியுறுத்துவதுடன் அதனை அடைவதற்கு அனைவரும் ஓரணியில் திரண்டு ஐக்கியமாகச் செயற்பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்று எமது செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் எழுபத்தியோராவது பிறந்த தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.

சிவசக்தி ஆனந்தன்
செயலாளர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

You might also like

Leave A Reply

Your email address will not be published.