;
Athirady Tamil News

காசி தமிழ் சங்கமம்- தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!!

0

காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை செல்லும் எல்லோரும் காசி– ராமேஸ்வரம் என்ற சொல்வது மிகவும் பிரபலமானது. ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற கலாச்சார, ஆன்மீக இணைப்பை பிரதமர் மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார். இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக காசியில் உள்ள பாரதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது தேசிய கீதம் ஒலித்த பின்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்பு நான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெறாமல் இருப்பதா? என்று எடுத்துக்கூறி மனோன்மணியம் பெ‌.சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாடினேன். இதை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.