;
Athirady Tamil News

மார்பக புற்று நோயும் மங்கையர் மருத்துவமும் !! (மருத்துவம்)

0

காத்திரமான மனித விருத்திக் கடப்பாடுகளில் ஒன்றான கலப்பிரிவு கட்டுப்பாடற்று நிகழ்வதனால், கலங்கள் பல்கிப் பெருகி, சுற்றயல் உறுப்புகள் முதல் மற்றைய உறுப்புக்களையும் ஊடறுத்து ஊறு விளைவிப்பதனால் உருவாகும் அசாதாரண நிலையே புற்று நோயாகும்.

இந்நோயானது, வயது மற்றும் பால் வேறுபாடுகளைக் கடந்து பலரையும் பாதித்தாலும் மனிதனுக்கு பாலுட்டிகள் என அங்கிகாரமளிக்கும் பாவையரில் நிகழ்கின்றபோது, பன்மடங்கு அபாயகரமானது. ஆகையினால் பூவையரின் புற்று நோய்கள், பொதுவாக யாவரை விடவும் அதிக அவதானத்தை ஈர்க்கிறது.

மார்பக புற்று நோய்: மதிப்பீடுகள்

உலகளவிலான மார்பக புற்று நோய் பாதிப்புக்களில் முதல் மூன்று இடங்களில் முறையே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகியனவும் இலங்கையானது 124வது இடத்திலும் உள்ளது.

இலங்கையில், மனித இறப்புக்கான முதல் இருபது காரணிகளில், மார்பக புற்று நோயானது 13ஆவது இடத்தில் உள்ளது.
2014இல்; மார்பக புற்று நோயினால் உலகளவில் 521,000 மரணங்களும் இலங்கையில் 1361 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன.
ஒவ்வொரு வருடமும் உலகளவில் 1.7 மில்லியன் பெண்களும் இலங்கையில் 1200 பெண்களும் புதிய மார்பகப்புற்று நோயாளர்களாக இனம் காணப்படுகின்றனர்.

இலங்கையில் புதிதாக இனங்காணப்படும்; புற்று நோயாளர்களில் 25வீதமானவர்கள் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களை பெருமளவில் பாதிக்கும் பொதுவான ஐந்து புற்று நோய்களில், மார்பக புற்று நோயே மிகத் தீவிரமானதாகவும், முதன்மையானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பெண்களில் ஏற்படும், பாலுறுப்பு புற்று நோய்கள் தொடர்பான பல்வேறு ஆரோக்கிய விடயங்ளை பகிர்ந்து கொள்கிறார் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் முதல்நிலை சிரேஷ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பெண்நோயியல் மகப்பேற்று விசேட மருத்துவ நிபுணருமான வைத்தியர் கே.ஈ.கருணாகரன்.

?:பல்வேறு வகைப் புற்று நோய்கள் பெண்களை பாதிக்கின்ற போதிலும், எதற்காக மார்பக புற்று நோய் முதன்மையான முக்கியத்துவம் பெறுகிறது?

மார்பகமானது உடலுக்கு வெளிப்புறமாகவுள்ளதால் பாதிப்புக்களை இலகுவாக இனங்காணக்கூடியதாகவும் தாய்மைப்பேறடைந்த பெண்களில் மார்பகமானது தாய்ப்பாலை சுரக்கின்ற அதீத தொழிற்பாடுடைய அங்கமாகவும் தீவிர புற்று நோய் நிலைகளில், முழுமையான மார்பகற்றல் அறுவைச்சிகிச்சையே தீர்வாக அமைவதனால், எழுகின்ற எடுப்புத்தோற்றம் சார்ந்த உளவியல் உணர்வுகளுமே மார்பக புற்றுநோயின் முக்கியத்துவத்தை உயர்த்துகின்றன.

? :மார்பக புற்று நோய்த் திரையிடல் (Screening) பரிசோதனை என்பது யாது?

நோய்வாய்ப்பட்ட போதிலும் நோயின் நிர்ணய அறிகுறிகளை கொண்டிராதவர்களை, அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளாகும். சுய மார்பகப் பரிசோதனை (Breast Self Examination), மருத்துவ மார்பகப் பரிசோதனை (Clinical Breast Examination), கதிர்ப்பட மார்பக பரிசோதனை (Mammogram) என்பன, மார்பக புற்று நோயின் திரையிடல் பரிசோதனைகளாகும்.

கர்ப்பிணிச் சிகிச்சை நிலையங்களில், முதற்தடவையில் (Booking Visit) கட்டாயமாக மேற்கொள்ளப்படும் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளுக்கு மேலதிகமாக, மருத்துவர், தாதிய சகோதரி அல்லது மருத்துவ மாதுவினால் மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ மார்பக பரிசோதனைகளும் மார்பக திரையிடல் பரிசோதனைகளாகவே கொள்ளப்படும்.

?:சுயமார்பகப் பரிசோதனையின் மருத்துவ முக்கியத்துவம் யாது?

குறிப்பாக இளம் பராயத்தினர் உட்பட்ட வயதுவந்த அனைத்துப் பெண்களும் இலகுவானதும் இரகசியமானதுமான இப்பரிசோதனையை, பொதுவாக மாதத்துக்கு ஒரு தடவையேனும் செய்து கொள்வது உசிதமானதாகும். மாதவிலக்கு நிறுத்தத்தின் பின்னரான சுத்தப்படுத்தலில் இதனையும் இணைத்துக்கொள்வது இன்னும் இலகுவாகவிருக்கும்.

இப்பரிசோதனைக்கான பயிற்சி ஆலோசனைகளை மேற்குறிப்பிட்ட மருத்துவ சேவையாளர்களிடம் பெற்றுக்கொள்வதோடு, இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அரைவாசிக்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோய்கள், சுயமார்பகப் பாசோதனையின் மூலமே கண்டறியப்படுவதோடு ஆரம்ப நிலையில் அறியப்பட்டால் சிகிச்சை முன்னேற்றங்கள் சிறப்பாகவிருக்கும்.

?:மார்பக புற்று நோயின் அறிகுறிகள் எவ்வாறிருக்கும்?

நோவற்ற மார்பகக்கட்டிகளே பிரதானமான அறிகுறியாகும். எவ்வாறெனினும் எல்லாக் கட்டிகளும் புற்று நோய்க்கட்டிகளுமல்ல. ஆரம்ப நிலையில், புற்றுநோய்க் கட்டிகள் தொட்டுணர முடியாததும், கதிரியக்க மார்பக பரிசோதனையின் மூலமே கண்டறியக்கூடியதுமான மிகச்சிறிய கட்டிகளாகவிருக்கும்.

அக்குள் கட்டிகள், மார்பகத்தினதும் முலைக்காம்பினதும் பருமனிலும் வடிவத்திலும் எற்படும் கணிசமான மாற்றங்கள், மார்பகத்தோல் தடிப்படைந்தோ அல்லது தோடம்பழத்தோல் போன்றோ மாற்றமடைதல், முலைக்காம்பு சிதைவடைந்து உட்திரும்பியிருத்தல், மார்பகத்திலிருந்து பாலைத் தவிர்ந்த ஏனைய திரவ வெளியேற்றம் போன்றவற்றை குறிப்பிட முடியும். எவ்வாறெனினும் திட்டவட்ட பரிசோதனைகளின் பின்னரே மார்பக மாற்றங்களின் புற்று நோய் அபாயங்களை அறிந்து கொள்ள முடியும்.

?:மார்பக புற்று நோயின் அபாயக் காரணிகள் எவை?

முன்னைய மார்பக நோய் வரலாறு, இளவயதில் (11 வயதுக்கு முன்னர்) பூப்படைதல், பிந்திய (55வயதுக்கு பின்னர்) முழுமையான மாதவிடாய் நிறுத்தம், மார்பக புற்று நோய் குடும்ப வரலாறு (தாய் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டிருத்தல்), பிந்திய தாய்மைப் பேறு (35வயதுக்குப் பின்னர்), புகைத்தலும் மதுபாவனையும் வைத்திய ஆலோசனையற்ற நீண்டகால கருத்தடை மாத்திரைப் பாவனை, பல்வேறு இனவிருத்தி பிரச்சினைகளுக்கான ஓமோன் மாற்றீட்டு சிகிச்சைகள் மற்றும் அதிகரித்த உடற்பருமன் என்பனவாகும்.

?:வெவ்வேறு வகையான மார்பக புற்று நோய்த் தரநிலைகளும் படிநிலைகளும் (புசயனநள ரூ ளுவயபநள) யாவை?

கீழ்குறிப்பிடப்படும் தரம் மற்றும் படிநிலைகளைக் கொண்டே, மார்பகப் புற்றுநோய்க்கான வௌ;வேறுவகைச் சிகிச்சை முறைகள் வரையறை செய்யப்படுகின்றன.

தரநிலைகள் (Grades & Stages): புற்று நோய்க் கலங்களில் நிகழும் கலப்பெருக்க வீதம் மற்றும் கருப்பிறழ்வு மாற்றம், பாதிக்கப்பட்டுள்ள பாற்சுரப்பு குழாய்களின் எண்ணிக்கை, புற்றுக்கட்டி வளர்ச்சி மற்றும் பரவல் தன்மையின் அடிப்படையில், வீரியம் குறைந்த முதலாம் தரம்(Grade-1), நடுத்தர வீரியமுடைய இரண்டாம்; தரம்(Grade-2) மற்றும் அதீத வீரியமுடைய மூன்றாம் தரம்(Grade-3) என வகைப்படுத்தப்படும்.

படிநிலைகள்(Stages):

புற்றுக்கட்டியின் பருமன், மார்பகத்துக்கு அருகிலுள்ள நிணநீர்க் கணுக்களின் பாதிப்பளவு மற்றும் புற்றுக்கட்டிகள் ஏனைய உடல் உறுப்புக்களுக்கும் பரவியிருக்கின்ற தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, தீவிரத் தன்மையின் அதிகரித்த போக்கில், பூஜ்ஜிய நிலை(Stage-0), முதலாம் நிலை(Stage-I), இரண்டாம் நிலை(Stage-II), மூன்றாம் நிலை(Stage-III) மற்றும் நான்காம் நிலை(Stage-IV) என ஐந்து நிலைகளாக பிரிக்கப்படும்.

? :மார்பக புற்று நோய் சிகிச்சை முறைகள் பற்றி?

சத்திர சிகிச்சை:

புற்று நோயின் தீவிரத்தன்மையை முதன்மைப்படுத்தியும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் நலன்களையும் கருத்திற்கொண்டும் தனித்துவமான சிகிச்சை முறைத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறெனினும் புற்றுக்கட்டியின் பருமனடிப்படையில் மார்பகத்தை பகுதியளவில் அல்லது முற்றாக அகற்றுகின்ற அறுவைச் சிகிச்சைகளே (Surgery) பிரதானமானவை.

கதிரியக்கச் சிகிச்சை:

அறுவைச் சிகிச்சைக்கு பின்னரான மீள் புற்றுநோய்த் தாக்கம், புற்றுக்கட்டிகள் ஏனைய உடற்பகுதிகளுக்கு பரவியிருக்கின்ற தன்மை மற்றும் புற்று நோய்த்தாக்கத்தின் ஆரம்பநிலை போன்ற சந்தர்ப்பங்களில், தனியாக அல்லது ஏனைய சிகிச்சைகளோடு கூட்டிணைந்ததாக கதிரியக்க சிகிச்சைகளும் (Radiation Therapy) வழங்கப்படுகின்றன.

மருந்துச் சிகிச்சை:

சில வேளைகளில், சத்திர சிகிச்சைக்குப் பின்னர், எஞ்சியிருக்கின்ற புற்று நோய்க கலங்களை அழிப்பதற்கும் புற்றுக்கட்டியைச்; சுருக்கி, சத்திர சிகிச்சையை இலகுபடுத்துவதற்கும் வீரியம் குறைந்த மற்றும் புற்று நோய்த்தாக்கத்தின், ஆரம்ப நிலைகளிலும் புற்று நோய்க் கலங்களை அழிப்பதற்கு, விசேட மருந்துகள் (Chemotherpy) வழங்கப்படுகின்றன

?:மார்பக புற்று நோயின் தாக்கத்தை எவ்வாறு தடுக்க முடியும்?

முக்கியத்துவம்:

சிகிச்சைகள வழங்கப்பட்டவர்களிலும் கூட, 5ஆண்டுகளின் பின்னர் உயிரோடு இருப்பவர்கள் மிகக் குறைவு என்பதனாலும் சிகிச்சைகளின் பாதகமான பின்விளைவுகள் மற்றும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் மேலைத்தேய பெண்களின் நோயென வர்ணிக்கப்பட்ட இந்நோய், இன்று இலங்கையிலும் கணிசமாக அதிகரித்திருத்தல் போன்றவற்றினால், வருமுன் தடுப்பதற்கான உபாயங்கள் பெருமளவில் முக்கியத்தவம் பெறுகின்றன.

தடுப்பு முறைகள்:

20வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுயமார்பக பரிசோதனைகளுக்கு மேலதிகமாக, மருத்துவ மார்பக பரிசோதனைகளுக்கும் 50வயதுக்கு மேற்பட்டவர்கள் மேற் குறிப்பிட்டவற்றைவிடவும் மார்பக கதிர்ப்பட பரிசோதனைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றனர். 20-40வயதிற்கிடைப்பட்ட பெண்கள் 3 வருடங்களுக்கு ஒரு தடவையும் 40வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒவ்வொரு வருடமும் மருத்துவ மார்பகப் பரிசோதனைகளையும் செய்வதன் மூலம், மார்பக புற்று நோய்த்தாக்கத்தை தவிர்த்து, வனிதையர் அழகும் ஆரோக்கியமும் கலந்த வளமான வாழ்க்கையை வாழலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.