;
Athirady Tamil News

மாநிலங்களவை புதிய எதிர்க்கட்சி தலைவர் யார்? சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை..!!

0

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் ஒரு மாதம் தாமதமாக தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல் செயல்முறையை சீர்திருத்தவும் வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தலைவர்கள் அனைவரும் தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் தொடர்ந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாத யாத்திரையில் இருந்து வேறு நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவதை கட்சித் தலைமை விரும்பவில்லை என்றும் அதனால்தான் மூத்த தலைவர்கள் குளிர்கால கூட்டத்தொடரைத் தவிர்த்துவிட்டு ராகுல் காந்தியுடன் யாத்திரையைத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின்படி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சோனியா காந்தி தலைமையில் இன்று மாலையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸ் தலைவர் கார்கேவையே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக தொடர அனுமதிக்கலாமா? என்று கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இது குறித்து சோனியா காந்தி, கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று இறுதி முடிவு எடுக்கலாம். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்தால், ப.சிதம்பரமும், திக்விஜய சிங்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.