;
Athirady Tamil News

தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது!!

0

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் சமஸ்டி தீர்வைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது எனவும் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கான தீர்வு வரும்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் யார் அந்தப் போராட்டத்தை அழித்தார்களோ அவரிடமே தற்போது தீர்வுக்காக நிற்கின்றார்கள்.

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு இந்திய மாதிரி மூலமே தீர்வை எட்டமுடியும் என்பதுடன் அவ்வாறான தீர்வூக்கே இந்தியா ஆதரவளிக்கும். அதனை விட அதிகமான தீர்வை வழங்க இந்தியா ஆதரவளித்தால் இந்தியாவில் அதே தீர்வை மக்கள் கோருவர்.
எங்களுடைய தலைவர்கள் யாருமே இந்திய மாதிரியை பேசுவது கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை மட்டும் இராஜ தந்திரம் என நினைப்பது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும்.தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவது பிழையல்ல ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி சமஷ்டியைப் பெற முடியாது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிராத ரணில் விக்கிரமசிங்க வழங்கப் போகும் தீர்வினை பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கவே மாட்டார்கள்.

ஏனெனில் பாராளுமன்றத்தில் உள்ள அநேகமானவர்கள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு கிடைக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை என்ற போர்வையில் சர்வதேசத்தை ஏமாற்ற தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார்கள்.

2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பலமான ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்க்ஷ இருந்தார்.அக்காலப் பகுதியில் யுத்தத்தை நிறுத்துவோம் என்னுடன் சேர்ந்து வாருங்கள் ஜனாதிபதியுடன் பேசுவோம் என கேட்டபோது தமிழ்த் தலைமைகள் அதற்கு விரும்பவில்லை என்னைத் துரோகி எனப் பட்டம் சூட்டினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பேசும்போது யாருடன் பேசப்போகிறோம் எதைப் பேசப் போகிறோம் ரணில் விக்கிரமசிங்கவினால் தர முடியுமா அல்லது அதனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதே இராஜதந்திரம் .

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்தியாவின் கைகளிலே தங்கியுள்ளது. தமிழ்த் தலைமைகள் எந்த ஜனாதிபதியுடன் பேசியும் இறுதியில் இந்தியாவே தீர்மானிக்கும்.

ஆகவே அதனை விடுத்து ஜனாதிபதி அழைத்தார் நாம் வருகிறோம் என எடுத்த எடுப்பில் பேச்சுவார்த்தைக்கு ஓடுவது தமிழ் மக்களுக்கு தீர்வாகாது என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.