;
Athirady Tamil News

கடலட்டை பண்ணை விடயத்தில் ஏன் மக்கள் பிரதிநிதிகள் மௌனம்!!

0

கடலட்டை பண்ணை விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் மௌனம் காத்தால் இனிவரும் காலங்களில் கடற்றொழில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டி வரும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன கூட்டாக வலியுறுத்தின.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன இதனை தெரிவித்தன.

மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்ட இடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க ஏன் கடற்படையால் முடியாதுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக முறையிட்டோம்

அனலைதீவு பருத்திதீவு பகுதியில் ஒரிருவருக்கு கடலட்டை பண்ணைகளை வழங்கினால் அங்கு இதுவரை காலமும் தொழில் செய்த 700 தொழிலாளர்களும் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார். கடலட்டை பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர் வீச்சு வலை தொழிலாளர்கள் அடிவலை தொழிலாளர்கள் இறால் பிடியை மேற்கொள்வோர் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் நேரத்தில் வீடுகளை தேடி வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது யாரும் வருவது கிடையாது. கடற்றொழிலாளர் சமூகத்திற்கு பிரச்சினை வரும்போது பலரும் பார்வையாளர்களாக இருக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசியல்வாதிகளுக்கு கண் இல்லையா? மக்களுக்கு தீர்வு வழங்கும் எண்ணம் இல்லையா? பொலிஸார் போராட்டகாரர்களை அச்சுறுத்துகின்றனர்.

இவ்வளவு காலமும் யார் கடலட்டையை பிடித்து அந்நியச் செலாவணியை வழங்கியது? தற்போது மட்டும் முதலாளிகளுக்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.சட்டத்தரணிகளுக்கும் வாகனத்தில் வந்து இறங்குபவர்களுக்கும் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

ஊடக சந்திப்பில், மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம் சார்பில் மடுத்தீஸ் பெனடிக்ற், வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் இ.மதியழகன்,
ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தலைவர் சி.சிவசெல்வன், புங்குடுதீவு நசரத் கடற்றொழிலாளர் சங்கம் சார்பாக
ஜோசப்தாசன் ரவி,யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.