;
Athirady Tamil News

8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்த போலீஸ் அதிகாரி- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்..!!

0

டெல்லி காவல் துறையில் மெட்ரோ போலீஸ் துணை ஆணையராக இருப்பவர் ஜிதேந்திர மானி (வயது 45). இவர் தனது 24 -வது வயதில் காவல்துறை பணியில் சேர்ந்தார். அப்போது ஒல்லியாக இருந்த ஜிதேந்திர மானியின் உடல் எடை நாளடைவில் அதிகரிக்க தொடங்கியது. ஆரம்பத்தில் இதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் நாளுக்குநாள் அவரது உடல் எடை கணிசமாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவரின் உடல் எடை 130 கிலோவாக உயர்ந்தது. இதனால் வீட்டில் உள்ளவர்களும், அவருடன் பணியாற்றுபவர்களும் ஜிதேந்திர மானியிடம் உடல் எடையை குறைக்குமாறு கூறினர். அப்போதும் மானி அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஒரு நாள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்பட்ட மானி டாக்டரிடம் சென்றார். அப்போது அவரது உடல் எடையை பரிசோதனை செய்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், மானியின் உடலில் சர்க்கரை அளவும், ரத்தக்கொதிப்பும் அதிகமாக இருந்தது. அதோடு உடலில் கொழுப்பின் அளவும் மிகவும் அதிகமாக இருந்தது. இதையடுத்து மானியிடம் நீங்கள் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என டாக்டர் கூறினார். அதன்பிறகுதான் ஜிதேந்திர மானி உடல் எடையை குறைக்க முடிவு செய்து தினமும் உடற்பயிற்சி சென்றார். ஒரு மாதம் உடற்பயிற்சிக்கு சென்ற பிறகும் அவரது உடல் எடை வெறும் 2 கிலோ மட்டுமே குறைந்திருந்தது. அப்போது தான் அவர் உடற்பயிற்சியோடு சேர்ந்து, தனது உணவு பழக்கத்தையும் மாற்ற முடிவு செய்தார். தினமும் 15 ஆயிரம் காலடிகள் நடந்ததோடு, ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்கினார். அதன் பிறகு அவரது உடல் எடை குறையத் தொடங்கியது. தொடர்ந்து உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு காரணமாக 8 மாதங்களில் அவரது உடல் எடை சரசரவென 46 கிலோ குறைந்தது. தற்போது 84 கிலோ எடையுடன் காணப்படுகிறார். இதுகுறித்து ஜிதேந்திர மானி கூறியதாவது:- உடல் எடையை குறைக்க முடிவு செய்ததும், தினமும் 15 ஆயிரம் அடி (காலடி) நடக்க தீர்மானித்தேன். சில சிறிய உடற்பயிற்சிகளையும் செய்தேன். என்றாலும் உடல் எடை குறையவில்லை. அப்போது தான் உணவு முறையை மாற்ற வேண்டும் என எனக்கு தெரியவந்தது. அதிகமாக சப்பாத்தியையும், சாதத்தையும் உண்ணும் பழக்கமுடைய நான், வெறும் பழங்கள், காய்கறிகள், சூப் வகைகளை சாப்பிட தொடங்கினேன். ஒரே ஒரு சப்பாத்தி, அதிக அளவில் காய்கறிகள் என உணவு முறையை மாற்றியதோடு, அதிக தண்ணீரையும் குடித்தேன். முக்கியமாக சர்க்கரையை தவிர்த்துவிட்டேன். ஒரு நாள் நடந்தால், மறுநாள் ஜாக்கிங் என 8 மாதங்கள் கடைபிடித்ததால் உடல் எடை 46 கிலோ குறைந்துள்ளது. இப்போது மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறேன். கண்ணாடியை பார்க்கும் போது எனக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.