;
Athirady Tamil News

செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால கனவு பலிக்குமா?

0

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்கக்கூடிய ஆதாரங்களை பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
அது சேகரித்த முதல் பாறை மாதிரி மீட்கப்ட்டு, பூமிக்கு கொண்டுவரப்படுவதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காத்துக் கொண்டிருக்கிறது.

ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக வேறொரு கிரகத்திலிருந்து பொருட்களை பூமிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற பல்லாண்டுக்கால காத்திருப்பில் இதுவொரு முக்கிய தருணம்.
பூமியிலுள்ள பாறை, மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அங்கு உயிர்கள் குறித்து இருக்கும் கேள்விக்குத் தீர்வு காண முடியுமென்று கருதப்பட்டது.

ரோபோவின் வயிற்றிலிருந்து விரல் அளவுள்ள மாதிரி குழாய் வெளியேற்றப்பட்டது. அப்படி வெளியேற்றப்பட்ட குழாய், தரையில் விழுந்ததை உறுதி செய்வதற்குப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் 2030இல் இந்த மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரத் திட்டமிட்டுள்ளன.
செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ கிரேட்டரில் த்ரீ ஃபோர்க்ஸ் என்றழைக்கப்படும் இடத்தில் அவை வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மட்டுமே அங்கு இருக்கப் போவதில்லை. உண்மையில், பள்ள விளிம்பிற்கும் அப்பால் ரோபோ ஓட்டும்போது, அது விடாமல் எடுத்துச் செல்லும் பாறைகளும் அங்கு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், பாறைகளைச் சேகரிக்கும்போது ரோவர் உடைந்து போகக்கூடிய அபாயமும் உள்ளது. ரோவரை அத்தகைய அபாயநிலையில் வைக்கக்கூடாது என்பதால் தான், ஒரு பாதுகாப்பிற்காக முன்கூட்டியே மாதிரி சேகரிப்புக் கிடங்கை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் தூண்டப்பட்டனர்.

த்ரீ ஃபோர்க்ஸ் கிடங்கு, மீட்டெடுப்புப் பணி வரும்போது மாதிரிகள் எதையாவது நாம் கொண்டுவருவதற்கான உத்தரவாதத்தைக் கொடுக்கிறது.

அந்தக் கிடங்குக்குச் செல்லப் போகும் முதல் பாறை மாதிரி, “மலாய்” என்றழைக்கப்படும் எரிமலை அல்லது அனற்பாறை. இந்த வகையைச் சேர்ந்த மேலும் மூன்று பாறைகளையும் ரோவர் அங்கு கொண்டு வந்து வைக்கும். அவற்றின் வேதியியியல் பண்புகள், ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெசெரோ பள்ளத்தின் வயதையும் செவ்வாய் கிரகத்தின் பரந்த புவியியல் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்கு உதவும்.

“டெல்டா நதி அல்லது ஒரு பழங்கால ஏரியின் அடிப்பகுதியைப் போன்ற பல்வேறு படிவு சூழல்களைக் கொண்டுள்ள பல்வேறு வண்டல் பாறைகள் உள்ளன. இந்த சுற்றுச்சூழல்களில் சில, வாழத் தகுதியுடையவையாக இருந்திருக்கலாம். அதோடு, இந்தப் பாறைகளில் சில, பழங்கால நுண்ணுயிர்களின் ஆதாரங்களைப் பாதுகாத்திருக்கக்கூடும்,” என்று பெர்செவரென்ஸ் திட்டத்தின் விஞ்ஞானி மீனாட்சி வாத்வா கூறினார்.
படிமங்கள் அடங்கிய மூன்று மாதிரி குழாய்கள் அங்கிருக்கும்.

கூடுதலாக, வாகனத்திலிருந்து வெளியேறும் அசுத்தங்கள் உட்பட ரோவருக்குள் இருந்த நிலைமைகளைப் பதிவு செய்யும் ஒரு சிறப்புக் குழாயுடன் பெர்செவரென்ஸ் ரோவர், மண் மற்றும் வளிமண்டலத்தின் மாதிரிகளை, இறக்கி வைக்கும்.
ஒருவேளை பெர்செவரன்ஸ் செயலிழந்துவிட்டால், மாதிரிகளை எடுத்து வருவதற்கான பயணம் நேராக த்ரீ ஃபோர்க்ஸ் பகுதிக்கே திசை திருப்பப்படும்.

அந்தத் திட்டத்தில் இரண்டு டிரோன்களை கொண்ட, குழாய்களைப் பிடிப்பதற்கு ஏதுவாக நகங்கள் பொருத்தப்பட்ட கருவி, அந்த மாதிரிகளை ராக்கெட்டுக்கு கொண்டு செல்லும். பிறகு அந்த ராக்கெட், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும்.
பெர்செவரன்ஸ் இன்றுவரை பாறைகளைத் துளையிட்டு இரண்டு மாதிரிகளைச் சேகரித்து வருகிறது. இந்த நடைமுறை த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் முடிவடையும்.

“அந்தக் கிடங்கில் கீழே வைப்பதற்கு ஒரு குழாயுயும் கையோடு எடுத்துச் செல்வதற்கு ஒரு குழாயும் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த இரண்டு ஜோடி மாதிரி உத்தியை நாங்கள் மேற்கொள்கிறோம்,” என்று பெர்சவரன்ஸ் ரோவரின் துணை திட்ட விஞ்ஞானி கேட்டி ஸ்டாக் மோர்கன் விளக்கினார்.

மேலும், “த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட கிடங்கை கட்டமைத்தவுடன், எங்களால் அடுத்த உத்திக்கு நகர முடியும். அதில் ஒரே மாதிரியை மட்டும் சேகரிப்போம். இது ஒருவகையில், எங்கள் அறிவியல் குழுவுக்கு விடுதலையளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அதற்குப் பிறகு, எங்களால் இன்னும் பல பகுதிகளுக்கு நகர்ந்து, இன்னும் பல வகையான பாறைகளின் மாதிரிகளைச் சேகரிக்க முடியும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் விளக்கினார்.

ஜனவரியில், பெர்சவரன்ஸ் அதன் அடிப்படைப் பணியை ஜெசெரோவில் முடித்திருக்கும். ஆனால், அனைத்து ரோபோ அமைப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில், அறிவியல்ரீதியாக இன்னும் பல வாய்ப்புகள் இருப்பதால், நாசா அதிகாரிகள் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

வாகனமும் அதன் கண்காணிப்புக்கு உதவும் இன்ஜெனியுட்டி என்றழைக்கப்படும் டிரோன் ஆகியவை, பள்ளத்தின் மேற்கில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மேடு மீது விரைவில் ஏறும்.
டெல்டா என்பது ஒரு நதியால் கொட்டப்படும் வண்டல் மற்றும் மணலில் இருந்து உருவாகும் ஓர் அமைப்பு. அது, பரந்த நீர்நிலைக்குள் நுழைவதைக் கடினமாக்குகிறது.

கடந்தகால நுண்ணுயிர்களின் ஆதாரங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கக்கூடிய அம்சம் அதற்கு உள்ளது.

வெள்ளச் செயல்பாடு நடந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் எனத் தோன்றும் வகையில், டெல்டாவின் மேல் பகுதியில் அளவில் பெரிதாகச் சிதறிக் கிடக்கும் சில பாறைகளை பெர்சவரன்ஸ் ஆராயும்.

பிறகு, ரோபோ பள்ளத்தின் விளிம்புக்கு நகரும். அங்கு கார்பனேட் வகை வண்டல் பாறைகள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் குறிப்பிடுகின்றன. பழங்கால நுண்ணுயிர் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு இவை நல்ல இடமாக இருக்கும்.
பெர்சவரன்ஸ் இன்னும் 20க்கும் மேற்பட்ட மாதிரி குழாய்களை நிரப்புவதற்குக் காத்திருக்கிறது.

தரையிறங்கும் தளம், ஹெலிகாப்டர்கள், ஒரு ரோபோ கை, திரும்பி வருவதற்கான ராக்கெட் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு, தோராயமாக இரண்டு ஆண்டு பயண நேரத்தோடு, 2028ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மாதிரி சேகரித்துக் கொண்டு வரும் பணிகள், பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

த்ரீ ஃபோர்க்ஸ் கிடங்கிலிருந்து அல்லது நேரடியாக வேறோர் இடத்திலுள்ள பெர்சவரன்ஸில் இருந்து, அது எடுக்கும் மாதிரி குழாய்கள், 2033இல் மீண்டும் ஒரு ஐரோப்பிய திட்டத்தின் மூலம் பூமிக்குக் கொண்டுவரப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.