;
Athirady Tamil News

ரஷ்ய படைக்குப் பின்னால் புதின் ஒளிந்திருக்கிறார்” – யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி சாடல்!!

0

ரஷ்யர்களின் எதிர்காலத்தை அந்நாட்டு அதிபர் புதின் அழித்துக் கொண்டிருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷ்ய படைகளை வழிநடத்துவதற்குப் பதிலாக, அதன் பின்னே புதின் ஒளிந்து கொண்டிருந்ததாக அவர் சாடியுள்ளார்.

சனிக்கிழமை யுக்ரேன் முழுவதும் ரஷ்யா குண்டுமழை பொழிந்ததை குறிப்பிட்ட ஸெலென்ஸ்கி, ரஷ்யாவை யுக்ரேனியர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.
அந்தத் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

ஞாயிறன்று புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்திலேயே கியவ் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.
ரஷ்யா ஏவிய 20 குரூயிஸ் ஏவுகணைகளில் 12-ஐ சுட்டு வீழ்த்திவிட்டதாக யுக்ரேன் ராணுவ தளபதி வலெரி ஸல்யூஜ்னி தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் மீதான படையெடுப்பு தொடங்கியதற்குப் பிறகு ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில் இதுவும் ஒன்று. அண்மையில் ரஷ்யா அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களால் யுக்ரேனில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

பொதுமக்களைக் குறிவைக்கவில்லை என்று ரஷ்யா மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், முக்கியமான மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை புதின் அண்மையில் ஒப்புக் கொண்டார்.

ரஷ்யர்களே! ராணுவம் தனக்கு பின்னால் இருப்பதாகவும், தான் முன்னணியில் இருந்து வழிநடத்துவதாகவும் உங்கள் தலைவர் காட்டிக் கொள்ள விரும்புகிறார். ஆனால், உண்மை என்னவென்றால் அவர் மறைந்து கொண்டிருக்கிறார். ராணுவம், ஏவுகணைகள், மாளிகைகள், குடியிருப்புகளுக்குப் பின்னே அவர் மறைந்து கொண்டிருக்கிறார்,” என்று யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் உங்கள் பின்னே மறைந்திருக்கிறார்; உங்கள் நாட்டையும், உங்கள் எதிர்காலத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கொடூர செயலை யாரும் மன்னிக்கவே மாட்டார்கள். உலகில் யாரும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். யுக்ரேன் ஒருபோதும் மன்னிக்காது,” என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இதேபோல், ரஷ்ய அதிபர் புதினும் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாகக் கூறி, யுக்ரேனில் போராடும் ரஷ்ய படைகளுக்குப் பின்னால் மக்களை அணிதிரட்ட அவர் முயன்றார்.

ரஷ்யாவின் இறையாண்மை, சுதந்திரமான, பாதுகாப்பான எதிர்காலம் என்பது நம் வலிமை மற்றும் விருப்பத்தைப் பொருத்தே உள்ளது என்பதை எப்போதும் அறிந்திருந்தோம். அது இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று புதின் தெரிவித்தார்.

“நமது மக்களையும் வரலாற்றில் நம்மிடம் இருந்த நிலங்களையும் பாதுகாப்பதாகவே” யுக்ரேன் மீது படையெடுத்ததாகக் கூறிய அவர், “தார்மீக, வரலாற்று ரீதியான உரிமைகள் நம் பக்கம் உள்ளது” என்றார்.
யுக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யாவை மேற்குலகம் தூண்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.

“சமாதானம் பற்றி மேற்குலகம் பொய் கூறியது. அவர்கள் ஆக்கிரமிப்புக்குத் தயாராகி வந்தனர். ரஷ்யாவை பலவீனமாக்கி துண்டாட யுக்ரேனையும் அதன் மக்களையும் இழிவான முறையில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்,” என்று புதின் சாடினார்.
போரின் தொடக்கம் பற்றிய ரஷ்யாவின் கூற்றுகளை யுக்ரேனும் மேற்குலகும் நிராகரிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.