;
Athirady Tamil News

பிரக்யா கூறியதில் என்ன தப்பு?.. “ஆயுதம் வைத்திருப்பதில் தவறு கிடையாது”.. உமா பாரதி சர்ச்சை பேச்சு!!

0

இந்துக்களை ஆயுதம் வைத்திருக்குமாறு பிரக்யா சிங் தாக்குர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? இந்துக்கள் ஆயுதம் வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது” என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பிரக்யா சிங்கின் பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு ஆதரவாக உமாபாரதியும் கருத்து தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உமா பாரதியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கத்தியை கூர் செய்யுங்கள்”
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவுக்கு பாஜக எம்.பி. பிரக்யா சிங் சில தினங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்டிருந்தார். கர்நாடகாவின் இந்துத்துவா அமைப்பான ஜாக்ரன வேதிகாவின் மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரக்யா சிங், ‘லவ் ஜிஹாதிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். நம் பெண் குழந்தைகளுக்கு கலாசார மதிப்பு குறித்து பாடம் நடத்துங்கள். கர்நாடகாவில் இந்துத்துவவாதிகள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, தற்காப்புக்காக நீங்கள் ஆயுதங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எனவே, குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக்கொள்ளுங்கள். கத்தியை கூர் செய்துகொள்ளுங்கள். யாரேனும் வீட்டிற்குள் புகுந்தால் அவர்களை தாக்குங்கள்’ என பிரக்யா சிங் பேசினார்.

வழக்குப் பதிவு
பிரக்யா சிங்கின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் வித்திட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரக்யாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில், ஷிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ், கோட்டே காவல் நிலையத்தில் பிரக்யா சிங் மீது புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு வேறு சமூகத்தினர் இடையே பகையை உண்டாக்குவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பது, மத உணர்வுகளை தூண்டிவிடுவது, மத உணர்வுகளை காயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் பிரக்யா சிங் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

என்ன தவறு இருக்கிறது?”
இந்நிலையில், பிரக்யா சிங்கின் கருத்து குறித்து உமா பாரதியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ‘ஷிவமொக்காவில் இந்துத்துவாதிகள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவேதான், இந்துக்களை ஆயுதங்களை வைத்திருக்குமாறு பிரக்யா சிங் கூறியிருக்கிறார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? ராமப்பிரான் கூட தனது பட்டத்தை துறந்து வனவாசம் புறப்பட்ட போது கூட, கடைசி வரை ஆயுதத்தை வைத்திருப்பேன் என உறுதியேற்றார். ஆயுதங்கள் வைத்துக் கொள்வதில்லை தவறு இல்லை. ஆனால், வன்முறை எண்ணம் கொண்டிருப்பதே தவறு’ என்றார்.

பதான் காட்சிகளை நீக்க வேண்டும்”
முன்னதாக, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பதான் திரைப்படம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், ‘பதான் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட காட்சிகளை நான் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட நிறத்தை ஆபாசமாக சித்திரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவி என்பது நமது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம். எனவே அந்த நிறம் கொச்சைப்படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது. தணிக்கைக் குழு அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.