;
Athirady Tamil News

உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை!!

0

வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய புதிய தொகுப்பை இரண்டாவதாக மற்றுமோர் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
பைடன் துணை அதிபராக இருந்த பிறகு பயன்படுத்திய ஆவணங்களின் முதல் தொகுப்பு, வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது.
ரகசிய கோப்புகளைத் தவறாகக் கையாண்டதாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பைடன் உதவியாளர்களால் கூடுதல் கோப்புகள் எப்போது, எங்கே கண்டுபிடிக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சுமார் 10 ஆவணங்களின் தொகுதி நவம்பரில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு சிந்தனைக் குழுவான பென் பைடன் (Penn Biden Center) மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த விஷயம் இந்த வாரத்தில் தான் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த ஆவணங்களில் யுக்ரேன், ஈரான், பிரிட்டன் தொடர்பான அமெரிக்க உளவுத்துறை குறிப்புகளும் விளக்கப் பொருட்களும் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோப்புகள் குறித்து வெள்ளை மாளிகை இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக, புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரீன் ஜீந்பியர் தினசரி செய்தியாளர் சந்திப்பின்போது கோப்புகளின் முதல் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
“அது நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. அதிபர் நேற்று தெரிவித்த விஷயங்களைத் தாண்டி நான் எதுவும் சொல்ல இயலாது,” என்று அவர் கூறினார்.

ஜோ பைடன் செவ்வாய்க்கிழமையன்று, கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு தான் “ஆச்சர்யம் அடைந்ததாகவும்” நீதித்துறையின் பரிசீலனைக்கு “ஒத்துழைப்பதாகவும்” கூறினார்.

சபை மேற்பார்வைக் குழு அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இதில் வெள்ளை மாளிகையின் ரகசிய கோப்புகள் தொடர்பான ஆவணங்களையும் தகவல் தொடர்புகளையும் ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் அடக்கம்.

ரகசிய ஆவணங்கள் உட்பட அனைத்து வெள்ளை மாளிகை பதிவுகளும், அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகத்திற்கு, நிர்வாகத்தின் பதவிக் காலத்திற்குப் பிறகு மாற்றப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், எஃப்.பி.ஐ அதிகாரிகள் ஃப்ளோரிடாவில் உள்ள டொனால்ட் டிரம்பின் வீட்டில் சோதனையிட்டபோது, டிரம்ப் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு மாற்றத் தவறிய 10,000க்கும் மேற்பட்ட கோப்புகளைக் கைப்பற்றினார்கள்.
மார்-எ-லாகோவுக்கு எஃப்.பி.ஐ அதிகாரிகள் வருவதற்கு முன்பாக, ரகசியக் கோப்புகளைத் திரும்பப் பெறுவதற்கு நீதித்துறை ஆணை வழங்கியது.

பாம் கடற்கரையிலுள்ள கோல்ஃப் கிளப்பில் இருந்து, உச்சகட்ட ரகசியம் எனக் குறிப்பிடப்பட்ட 18 ஆவணங்கள் உட்பட, ரகசியம் என்று அடையாளப்படுத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டன.

இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டவுடன், பைடனின் வழக்கறிஞர்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்குத் தகவல் தெரிவித்ததாகவும் மறுநாள் காலையில் அவற்றை ஒப்படைத்ததாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.