;
Athirady Tamil News

கடன் நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தானை கரை சேர்க்குமா சௌதி?

0

புத்தாண்டின் துவக்கம் பாகிஸ்தானுக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. பாகிஸ்தான் தனது சொந்தக் காலில் நிற்காமல், செளதி அரேபியாவின் கடனை சார்ந்தே இருந்து வருகிறது. 2023ம் ஆண்டும் இதே போலவே தொடங்கியது.
செளதி அரேபியா மீண்டும் பாகிஸ்தானை கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கப் போகிறது. பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரம் ஐந்து பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது. இது ஒரு மாதத்திற்கான இறக்குமதிச்செலவை பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானது.

இது தவிர பாகிஸ்தானுக்கு திருப்பிச் செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் உள்ளது. உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், திவாலாகும் நிலை ஏற்படும்.
கடந்த வாரம்தான் பாகிஸ்தான் நிதிஅமைச்சர் இஷாக் தார், திவாலாவதற்கான வாய்ப்பை நிராகரித்தார். செளதி அரேபியா விரைவில் புதிய கடன் வழங்கப் போகிறது என்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையத் ஆசிம் முனீர், செளதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெனரல் முனீர் கடந்த வாரம் செளதி அரேபியா சென்றார். திங்கட்கிழமை அவர் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.

செளதியின் முக்கிய அறிவிப்பு
இந்த சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தானில் முதலீட்டை 10 பில்லியன் டாலர் வரை அதிகரிப்பதை ஆய்வு செய்யுமாறு செளதி பட்டத்து இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, பாகிஸ்தானின் மத்திய வங்கியில் உள்ள டெபாசிட்களை ஐந்து பில்லியன் டாலர்கள் வரை அதிகரிப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளுமாறு செளதி மேம்பாட்டு நிதியத்தை அதாவது SDF ஐ அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. மறுபுறம், பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை செளதி கடந்த டிசம்பர் மாதம் நீட்டித்தது.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பொருளாதாரத்திற்கு உதவ பட்டத்து இளவரசர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்று செளதி அரசு செய்தி முகமையான SPA தெரிவிக்கிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது.

பாகிஸ்தானை கைதூக்கி விடுவதற்கு செளதி அரேபியா முன்வருவது இது முதல் முறையல்ல. செளதி அரேபியா கடந்த காலங்களில் இதை பலமுறை செய்துள்ளது.

எண்ணெய்க்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவியை இரட்டிப்பாக்குவதாக கடந்த ஆண்டு, செளதி அரேபியா அறிவித்தது. இது தவிர 4.2 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தும் தேதியும் நீட்டிக்கப்பட்டது. முந்தைய கடன் ஒப்பந்தத்தின் கீழ் 2021 டிசம்பரில் செளதி அரேபியா பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் மூன்று பில்லியன் டாலர்களை டெபாசிட் செய்தது.

2021 அக்டோபரில் செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு, 4.2 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்தது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செளதி சுற்றுப்பயணத்தின் போது இந்த உதவி அறிவிக்கப்பட்டது. இந்த உதவி குறைவான வட்டியுடன் கூடிய கடன் மற்றும் எண்ணெய் கடன் வடிவில் இருந்தது.

அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்து, “பாகிஸ்தான் மத்திய வங்கிக்கு மூன்று பில்லியன் டாலர்களும், எண்ணெய்க்காக 1.2 பில்லியன் டாலர்களும் வழங்கிய பட்டத்து இளவரசருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். செளதி அரேபியா ஒவ்வொரு கடினமான நேரத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற ஷாபாஸ் ஷெரீப், அதன் பிறகு இரண்டு முறை செளதி அரேபியா சென்றுள்ளார்.
ஜெனரல் முனீர் நவம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார். பதவியேற்ற ஒன்றரை மாதங்களுக்குள் அவர் செளதி அரேபியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள அரசியல் தலைமையை விட அங்குள்ள ராணுவத்தின் பேச்சை செளதி அரேபியா அதிகம் கேட்பதாக கூறப்படுகிறது. ஜெனரல் முனீர் அங்கு சென்ற பிறகு வெளியான பட்டத்து இளவரசரின் இந்த அறிவிப்பு இந்தக்கூற்றுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

2018 இல் பிரதமரான பிறகு இம்ரான் கான் செளதி அரேபியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். அப்போதும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி தேவைப்பட்டது.
பாகிஸ்தான், ​​செளதி அரேபியா மற்றும் அமெரிக்காவை அதிக அளவில் சார்ந்திருப்பது வெட்கக்கேடானது என்று இம்ரான் கான் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI), 2014 செப்டம்பர் 20 ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து இம்ரான் கானின் அறிக்கையை ட்வீட் செய்தது.
“நாம் உதவிக்காக செளதிக்கும் அமெரிக்காவுக்கும் செல்வது மிகவும் வெட்கக்கேடானது” என்று இந்த ட்வீட்டில் இம்ரான் கான் கூறியிருந்தார்.

பாகிஸ்தானை ஒவ்வொரு முறையும் செளதி அரேபியா காப்பாற்றுவது ஏன்?
அரபு நாடுகளில் மேலாதிக்கம் செய்வதற்காக சன்னி ஆதிக்க நாடான செளதி அரேபியாவுக்கும், ஷியா ஆதிக்கம் செலுத்தும் இரானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே விரோதம் நிலவுகிறது. இரு நாடுகளும் ஏமனில் மறைமுகப் போரிலும் ஈடுபட்டுள்ளன.
தேவைப்பட்டால் பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ ஒத்துழைப்பையும் செளதி அரேபியா எதிர்பார்க்கிறது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இஸ்லாமிய உலகில் உள்ள ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தான்.

தேவைப்பட்டால் பாகிஸ்தான், செளதி அரேபியாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. செளதி அரேபியா மற்றும் அரச குடும்பத்தின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

செளதி அரேபியாவின் இறையாண்மையை பாதுகாக்க தனது நாடு எந்த வகையிலும் அதற்கு ஆதரவாக நிற்கும் என்று 2019 அக்டோபரில் செளதி அரேபியாவிற்கான தனது பயணத்தின் போது அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.

உலக நாடுகளின் அணுகுமுறை எதுவாக இருந்தாலும், பாகிஸ்தான் செளதி அரேபியாவுடன் நிற்கும் என இம்ரான் கான் தெரிவித்தார். செளதி அரேபியாவின் ராணுவத்துக்கும் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. செளதி அரேபியாவில் 65 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி பிரான்சில் வசிக்கும் விருது வென்ற பத்திரிகையாளர் தாஹா சித்திக்கி எழுதிய ஒரு கட்டுரை 2019 பிப்ரவரி 16 ஆம் தேதி அல்-ஜசீராவில் வெளியானது. பொருளாதார உதவிகள் மற்றும் முதலீடுகளின் வாக்குறுதிகள் மூலம் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் அரசின் விசுவாசத்தைப் பெற செளதி அரேபியா முயற்சிக்கிறது. தனக்கு ஏற்புடைய விதத்தில் பாகிஸ்தானின் கொள்கைகளை உருவாக்குகிறது,” என்று அதில் அவர் எழுதியுள்ளார்.

“செளதி கடன் கொடுப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய விஷயம் அல்ல. செளதியின் பணம் மற்றும் அமெரிக்க கொள்கையின் காரணமாக இஸ்லாமாபாத் எப்போதும் ரியாத்துடன் நெருக்கமாக உள்ளது. 1977 இல் ஜியா-உல்-ஹக் இடதுசாரி சார்பு கொண்ட சுல்ஃபிகர் அலி புட்டோவை ஆட்சியில் இருந்து அகற்றியபோது இந்த உறவு முன்னுக்கு வந்தது. அமெரிக்காவை நெருங்குவதற்காகவும் இது செய்யப்பட்டது,” என்று தாஹா சித்திக்கி குறிப்பிட்டுள்ளார்.

செளதியின் உத்தி என்ன?
1970களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, ​​செளதி அரேபியாவின் கருவூலம் நிரம்பத் தொடங்கியது. தேவைக்கு அதிகமான பணம் அந்த நாட்டிடம் வந்தது. இந்த பணத்தின் அடிப்படையில், அரபு மற்றும் முஸ்லிம் உலகில் ’செக் புக் ராஜதந்திரத்தை’ செளதி அரேபியா முன்னே கொண்டு வந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாடுகளின் ஆதரவைப் பெற செளதி அரேபியா தனது பணத்தை அதிக அளவில் பயன்படுத்தியது.

செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்தது மட்டுமின்றி மத அடிப்படையிலும் உதவி செய்தது. பாகிஸ்தானின் மசூதிகள் மற்றும் மதரஸாக்களும் செளதி அரேபியாவிடமிருந்து நன்கொடை பெற்றன.

“செளதியின் உதவி பாகிஸ்தானுக்கு பல வழிகளில் வந்தது. ராணுவம் மற்றும் சிவில் உதவி வடிவத்தில் மட்டுமல்லாமல், மத விஷயங்களுக்கும் உதவி கிடைத்தது. ஜியா-உல்-ஹக் அரசு, மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் செளதி நன்கொடைகளை அனுமதித்தது,” என்று தாஹா சித்திக்கி எழுதியுள்ளார்.
இந்த உதவி ஷியா எதிர்ப்பு மற்றும் அடிப்படைவாத இஸ்லாத்தை ஊக்குவிக்கும் வகையில் வந்தது. பாகிஸ்தானில் சன்னி தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் ரியாத் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தன. இரானிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமெரிக்கா செளதி அரேபியாவின் நட்பு நாடு. பாகிஸ்தான் அமெரிக்காவிற்கும் முக்கியமானதாக இருந்தது. 1979 பிப்ரவரியில் இரானிய புரட்சி மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியன் படையெடுப்பு போன்ற இரண்டு நிகழ்வுகள், அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு பாகிஸ்தானை முக்கியமானதாக மாற்றியது.

மேற்கு ஆசியாவில் சோவியத் யூனியன் மற்றும் இரானின் செல்வாக்கைக் குறைக்க அமெரிக்கா அங்கு ஒரு முன்னணியை உருவாக்க விரும்பியது. இந்த சூழ்நிலைகள் அமெரிக்காவிற்கு பாகிஸ்தானை முக்கியமாக ஆக்கியது. கூடவே செளதி அரேபியாவிற்கு நெருக்கமாக அதை கொண்டு வந்தது.
இருப்பினும் இம்ரான் கான் ஆட்சியில், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் கசப்பு காணப்பட்டது. பாகிஸ்தானின் புதிய அரசு அமெரிக்காவுடனான உறவுகளை மீட்சிப்பாதையில் கொண்டு வர முயற்சி எடுக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அதே நேரத்தில் செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடைவெளியும் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. செளதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் கசப்பு ஏற்படுவதற்கு ஏமன் போரும் ஒரு காரணம்.
தனக்கு அமெரிக்கா உதவவில்லை என செளதி அரேபியா கருதுகிறது. மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, அமெரிக்காவுடனான இடைவெளி அதிகரித்துள்ள போதிலும், ராணுவ ரீதியாக வலுவாக மாற செளதி அரேபியா விரும்புகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

செளதியின் அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்தது எவ்வளவு?
செளதி அரேபியா வாக்குறுதி அளித்த போதிலும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி பாகிஸ்தானில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவில்லை என்று இம்ரான் கானின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும் முதலீட்டு வாரியத்தின் (BOI) முன்னாள் உறுப்பினருமான ஹரூன் ஷெரீப் 2022 ஜூன் மாதம் கூறினார்.

முதலீட்டுக்கு செளதி அரேபியா நிபந்தனை விதித்திருந்தது. அதை நிறைவேற்ற முடியவில்லை என்று அவர் கூறினார்.
இஸ்லாமாபாத் கொள்கை ஆய்வுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய ஹாரூன் ஷெரீப், ”செளதி இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தானில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் தயாராக இருந்தார். ஆனால் இந்த முதலீட்டை அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகத்துறையினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்,” என்று கூறினார்.

தனது அறிக்கையை தெளிவுபடுத்தும் விதமாக செவ்வாயன்று ஒரு தனியார் செய்தி சேனலிடம் பேசிய ஹாரூன் ஷெரீப், “செளதியின் பட்டத்து இளவரசர் பாகிஸ்தானை நன்றாக புரிந்துகொண்டுள்ளார். எனவே விரைவாக செயல்படுத்த நிர்வாகத்துறை சிக்கல்களில் இருந்து அதை விலக்கி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்” என்று தெரிவித்தார்.
”சர்வதேச அளவில் முதலீடு செய்வதற்கான அமைப்பை நாட்டில் உருவாக்க வேண்டும். இதைத்தான் செளதி அரேபியா எங்களிடம் கூறியது. செளதியின் முதலீட்டை நாம் முழுமையாக தவறவிட்டோம். தவறவிடாமல் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.”

பாகிஸ்தானில் 20 பில்லியன் டாலர் முதலீட்டிற்கு செளதி அரசு உறுதியளிக்கிறது என்றும் ஆனால் அதை அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பிடமிருந்து காப்பாற்றாவிட்டால், இந்த முதலீடு நடக்காது என்றும் செளதி பட்டத்து இளவரசர் 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு சந்திப்பில் தெரிவித்தார் என்று ஹாரூன் ஷெரீப் குறிப்பிட்டார்.

செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2019 பிப்ரவரியில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, ​​பாகிஸ்தானில் பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி மற்றும் சுரங்கத் திட்டங்களில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தார். இது தவிர, செளதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2,000 பாகிஸ்தான் குடிமக்களை உடனடியாக விடுதலை செய்வதாகவும் சல்மான் அறிவித்தார்.

பட்டத்து இளவரசரின் இந்த அறிவிப்பின் மூலம் பாகிஸ்தானியர்களின் மனதை அவர் வென்றதாக இம்ரான் கான் கூறியிருந்தார். மரபை மீறி இம்ரான் கான் தானே காரை ஓட்டி, தனது இல்லத்திற்கு பட்டத்து இளவரசரை அழைத்துச்சென்றார்.

செளதி பட்டத்து இளவரசர் தனது பாகிஸ்தான் பயணத்தின் போது பெற்ற வரவேற்பு எந்த ஒரு சர்வதேச அரசியல்வாதிக்கு அளிக்கப்படுவதைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. செளதி அரேபியாவில் 25 லட்சம் பாகிஸ்தான் குடிமக்கள் பணிபுரிவதாக இம்ரான் கான் கூறியிருந்தார். இவர்கள் குடும்பத்தை விட்டு செளதி அரேபியாவுக்கு சென்று கடினமாக உழைக்கிறார்கள் என்றும் தங்கள் குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் முதலீடு அதிகரிக்கும் போதுதான் எந்தவொரு பொருளாதாரமும் வளரும். ஆனால் பாகிஸ்தானில் அப்படி இல்லை என்று இஸ்லாமாபாத் கொள்கை ஆய்வுக்கழக நிகழ்ச்சியின் போது ஹாரூன் ஷெரீப் கூறினார்.

ஹாரூன் ஷெரீப்பின் அறிக்கையை ட்வீட் செய்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் அகமது குரேஷி, “செளதி அரேபியா 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராக இருந்தது. செளதி அரேபியா முதலீட்டிற்கு நல்ல சூழலைக் கோரியது. ஆனால் அப்போதைய பிரதமர் இம்ரான் கான் மக்களை திருப்திப்படுத்தும் விருப்பங்களை தேர்ந்தெடுத்தார்.

இஸ்லாமோஃபோபியா டிவி கொண்டு வருவதைப் பற்றி பேச ஆரம்பித்தார். செளதி அரேபியா ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு OIC-க்கு சவால் விட ஆரம்பித்தார். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோத ஆரம்பித்தார். அமெரிக்கா, இஸ்ரேல், UAE கூட்டணியுடன் போட்டியிடுவது பற்றி பேச ஆரம்பித்தார். இதனால், முதலீடு வரவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் நெருக்கடியை செளதி அரேபியா தற்போதைக்கு ஒத்திவைத்துள்ளது. ஆனால் துயரம் முடிவுக்கு வரவில்லை. 2021 இல் பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடன் 130.433 பில்லியன் டாலர்கள் என்று உலக வங்கி கூறுகிறது. வர்த்தகப் பற்றாக்குறை குறையும் அறிகுறி தென்படாத நிலையில் இந்தக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.