;
Athirady Tamil News

ரொனால்டோவின் ‘லிவ் இன்’ உறவுக்கு ஷரியா சட்டத்தில் விலக்கு தருமா சௌதி?

0

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செளதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்பிற்காக இனி விளையாட உள்ளார். அவர் அந்த கிளப்பில் இணைந்ததில் இருந்து அவரது பல படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
சில படங்களில் அவர் செளதி அதிகாரிகளுடன் உணவு சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. சில வீடியோக்களில் அவர் பயிற்சி செய்வதை நாம் காணலாம். எனினும் ஓர் ஆட்டத்துக்கு அவர் தடை செய்யப்பட்டதால் இதுவரை செளதி கிளப் அணிக்காக அவரால் எந்த போட்டியிலும் விளையாட முடியவில்லை.

ஆனால் அவரது சொந்த வாழ்க்கை செளதி அரேபியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் ரொனால்டோ தனது லிவ்-இன் பார்ட்னர் ஜார்ஜினாவுடன் செளதி அரேபியாவில் ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார்.
செளதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை.

செளதி அரேபியாவில் திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொள்வது அல்லது ஒன்றாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு கடுமையான தண்டனை வழங்கவும் விதிமுறை உள்ளது.
இதுவரை செளதி அரேபிய அதிகாரிகள், அல் நாசர் கால்பந்து கிளப் அல்லது ரொனால்டோ, இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ரொனால்டோ செளதி அரேபியாவிற்கு வந்தவுடன், அளிக்கப்பட்ட கிளப்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது பார்ட்னர் ஜார்ஜினா, ’அபாயா’(இஸ்லாமிய உடை) அணிந்து கலந்து கொண்டார்.

ரொனால்டோ செளதி கிளப்பில் இணைந்தது அரபு நாடுகளின் கால்பந்து உலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம் பார்வையாளர்கள், அதன் அரசியல் மற்றும் கலாச்சார தாக்கங்கள் பற்றியும் விவாதிக்கின்றனர்.

ரொனால்டோ தனது பார்ட்னர் ஜார்ஜினாவுடன் செளதி அரேபியாவில் வாழ்வதற்கு ’சலுகை’ வழங்கப்படலாம் என்று கால்பந்து உலகத்துடன் தொடர்புடையவர்கள் நம்புகிறார்கள்.
செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030க்கு இது ஒரு முக்கியமான நடவடிக்கை. செளதி அரேபியா இதை ‘ஸ்போர்ட் வாஷிங்’ ஆகப் பயன்படுத்தி, நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த சில மாதங்களில் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி இறுதிக் கட்டத்திற்குள் நுழைவதை பார்க்க முடிகிறது.

மான்செஸ்டர் யுனைடெட்டில் தனது கால்பந்து வாழ்வின் உச்சத்தை எட்டிய ரொனால்டோ, அந்த கிளப்புடன் கால்பந்தாட்டத்திற்கு குட்பை சொல்வார் என்று ஓராண்டுக்கு முன்பு வரை நம்பப்பட்டது.

ஆனால் கிளப் நிர்வாகக் குழுவுடன் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து, இது குறித்து பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்திய அவர், தனது கவலையையும் தெரிவித்தார்.

இந்த நேர்காணலுக்குப் பிறகு கிளப், ரொனால்டோவை பிரிய முடிவு செய்தது. இதேபோல் கடந்த மாதம் உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 போட்டியின் ஒரு பந்தயத்தில் போர்ச்சுகல் தேசிய அணியில் முதல் முறையாக ரொனால்டோ சேர்க்கப்படவில்லை.
போர்ச்சுகல் அணி அந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் காலிறுதியில் மொராக்கோ அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியைத்தழுவியது.

ரொனால்டோவுக்கு இப்போது 37 வயதாகிறது. இதுவே அவரது கடைசி கால்பந்து உலகக் கோப்பை. மொராக்கோவிற்கு எதிரான போட்டியின் முடிவில் ரொனால்டோ மிகவும் அதிர்ச்சியடைந்து திரும்பிச் செல்வதைக் காண முடிந்தது.

செளதி அரேபியாவின் ஷரியா சட்டம் மற்றும் ரொனால்டோ
செளதி அரேபியாவில் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை அது தடை செய்கிறது.
வழக்கமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஹோட்டலில் தங்கும் போதோ அல்லது வீட்டு உரிமையாளர் தங்கள் வீட்டை யாருக்காவது வாடகைக்கு விடும்போதோ, அவர்களிடம் ஆவணச்சான்று கேட்கப்படும். அது பின்னர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த சட்டத்தை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வெளிநாட்டினர் விஷயத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடந்த பல ஆண்டுகளாக மென்மை போக்கு நிலவுகிறது.

2019 ஆம் ஆண்டில் செளதி அரேபியாவின் விசா கொள்கை தளர்த்தப்பட்டது. அதன்படி திருமணமாகாத வெளிநாட்டு தம்பதிகளும் ஹோட்டல் அறைகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் பெண்களும் ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் தனியாக இருக்க வேண்டும்.

இதற்கு முன் தம்பதி அறையைப் பெறுவதற்கு திருமணச் சான்றை அளிக்க வேண்டும்.
ஆனால் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் செளதி அரேபியாவில் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும். எனவே அவர்கள் அங்கு தங்குவது விவாதப் பொருளாகவே உள்ளது.

இந்நிலையில் செளதி அரேபியா சட்டத்தை மாற்றாது என்றும் வெளிநாட்டினருக்கு காட்டப்படும் மென்மை போக்கு மட்டும் ரொனால்டோ, ஜார்ஜினா விவகாரத்திலும் செயல்படுத்தப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோ ஒரு சிறந்த கால்பந்துவீரராக இருப்பது, செளதி அரேபிய அரசின் நடவடிக்கையில் இருந்து அவரை காப்பாற்றக்கூடும் என்று இரண்டு செளதி அரேபிய வழக்கறிஞர்களை மேற்கோள் காட்டி ஸ்பானிஷ் செய்தி முகமை EFE தெரிவித்துள்ளது.

”திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது சட்டப்படி இப்போதும் குற்றமாகும். ஆனால் அரசு அமைப்புகள் இதையெல்லாம் இப்போது கண்டும் காணாமல் இருக்கத்தொடங்கியுள்ளன. அதற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்தால் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது,” என்று செய்தி முகமையிடம் பேசிய இந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

ரொனால்டோ மற்றும் ஜார்ஜினாவின் உறவு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நீடிக்கிறது. 2016 முதல் இருவரும் ஒன்றாக உள்ளனர். அப்போது ரொனால்டோ ஸ்பானிஷ் கால்பந்து கிளப்பான ரியால் மாட்ரிட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.
ஜார்ஜினா மற்றும் ரொனால்டோவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ரொனால்டோவுக்கு செளதி அரசு விலக்கு அளிக்கும் என்று பெரும்பாலான மக்கள் கருதும் அதே வேளையில், “சட்டமும் மதமும் ஏழைகளுக்கு மட்டுமே” என்பதை இது காட்டுகிறது என்று ஒரு ட்விட்டர் பயனர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

அதே நேரம் இந்த விஷயத்தில் செளதி அதிகாரிகளின் சாத்தியமான சலுகையை சில பயனர்கள் வரவேற்றுள்ளனர். ரொனால்டோ இப்போது ஜார்ஜினாவை திருமணம் செய்து கொள்வாரா என்று அவர்கள் கேள்வியும் எழுப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.