;
Athirady Tamil News

இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி கிடைப்பதில் சிக்கல்: இந்தியா, சீனா உதவாவிட்டால் என்னவாகும்?

0

சீனாவும் இந்தியாவும் தங்களிடம் இலங்கை வாங்கிய கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிற நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் முடியாமல் தவித்து வருகிறது. இதையடுத்து, சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை கடனை வழங்க ஒப்புக்கொண்டது.

எனினும், இதன் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும். இதனால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு கிடைப்பதில் கால தாமதம் நிலவுகிறது.

இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் பிபிசி நியூஸ்நைட்டிடம், அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயல்பட வேண்டும் என்பது தங்களின் விருப்பம் என தெரிவித்தார்.

“அவர்கள் எங்களுக்கு எந்தளவுக்கு விரைவாக நிதி உத்தரவாதம் வழங்குகின்றனரோ அந்த அளவுக்கு கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவர் என இரு தரப்புக்குமே நல்லது” என்று பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

“அது அவர்களின் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க எங்களுக்கு உதவும். கடமைகளை நிறைவேற்றாமல், நீண்ட காலத்திற்கு இவ்வாறான நிலையில் இருக்க நாங்கள் விரும்பவில்லை. அது நாட்டுக்கும் எமக்கும் நல்லதல்ல. இது இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு நல்லதல்ல” என்றும் அவர் கூறினார்.

கடந்த வருடத்தில் இருந்து நாட்டில் பணவீக்கம் சற்று குறைந்துள்ள போதிலும், கடந்த மாதம் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை விட 65% அதிகமாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான உலக உணவுத் திட்டம், இலங்கையின் 80 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பு இல்லாமல் பட்டினியில் உள்ளனர் என்றும் குறிப்பாக கிராம பகுதியில் அதிகம் என்றும் கூறியுள்ளது. 80 லட்சம் என்ற எண்ணிக்கை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமானது ஆகும்.

பொருளாதார சூழல் அந்நாட்டில் கடந்த ஆண்டு மாபெரும் போராட்டத்திற்கு வித்திட்டது. இதன் காரணமாக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜூலையில் நாட்டைவிட்டே வெளியேறினார்.

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 9.2% ஆல் சுருங்கியது என்றும் இந்த ஆண்டு மேலும் 4.2% சுருங்கும் என்றும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீனாவின் கடன் என்பது 7 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இந்தியாவின் கடன் என்பது ஏறக்குறைய 1 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனா மற்றும் இந்தியாவுடன் ஒரு புதிய கட்டணத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் ஆரம்பத்தில் எதிர்பார்த்திருந்தது.

ஜனவரியின் பிற்பகுதியில் இது தொடர்பாக ஒப்பந்தங்கள் வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த வீரசிங்க, “இது அனைத்துமே மற்ற தரப்பை சார்ந்து உள்ளது, எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள்தான் முடிவுகளை எடுக்க வேண்டும்” எனவும் கூறினார்.

மேலும், அவர்களுக்கு தேவையான நாட்டின் கடன்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கை தற்போது வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் (சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறை சார்ந்தவை) வளர்ந்துவரும் நாடுகளுக்கு சீனா கடன்களை வழங்கிவரும் சூழலில் இலங்கைக்கான கடனை மறுசீரமைப்பு செய்வது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சீனா கவலைகொள்வதாக சுதந்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிதி கிடைப்பதில் சிக்கல்: கடனை மறுசீரமைக்க இந்தியா, சீனாவுக்கு இலங்கை வலியுறுத்தியுள்ளது

இதற்கிடையில், இந்தியா தனது பிராந்திய போட்டியாளரான சீனாவிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தாழ்ந்த விதிமுறைகளைப் பெறுவதில் எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடன் கொடுத்த நாடுகளில் மிகப்பெரிய நாடான சீனாவுக்குதான் இதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவிக்கிறார்.

“சீனா தாமதம் செய்யக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம், ஏனினில் இலங்கைக்கு தாமதம் செய்வதற்கான நேரம் இல்லை. அவர்களுக்கு உடனடியாக இந்த உத்தரவாதங்கள் தேவை” என்றும் பிபிசி நியூஸ்நைட்டில் அவர் கூறினார்.

“இலங்கை மக்களின் நலனுக்காக, இந்த சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இலங்கை அடையத் தொடரும் போது, சீனா எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்” எனவும் ஜூலி சுங் குறிப்பிட்டார்.

ஆனால், இலங்கையுடனான கடனை மறுசீரமைக்க இந்தியாவும் சீனாவும் ஒப்புகொண்டாலும், நாட்டின் வெளிநாட்டுக் கடன் பங்குகளில் 40% பங்கு வகிக்கும் தனியார் கடனாளிகள் வழியாக மற்றொரு சாத்தியமான சிக்கலும் உள்ளது.
நிதி கிடைப்பதில் சிக்கல்: கடனை மறுசீரமைக்க இந்தியா, சீனாவுக்கு இலங்கை வலியுறுத்தியுள்ளது

2001 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா பொருளாதார நெருக்கடியில் மூழ்கிய பின்னர், சில அமெரிக்க நிதியங்கள், திறந்த சந்தையில் தாங்கள் வாங்கிய கடன் பத்திரங்களை மறுசீரமைப்பதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, முழுத் திருப்பிச் செலுத்துமாறு கோரி அந்நாட்டு அரசாங்கத்தை அமெரிக்காவில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றன.

ஜனவரி 8 அன்று சர்வதேச பொருளாதார வல்லுனர்களின் ஒரு பெரிய குழு இலங்கையின் பத்திரங்களை “ரத்துசெய்ய” அழைப்பு விடுத்த. மேலும், “தற்போதைய சூழலில் இருந்து வெளியே வர, இலங்கைக்கு கடன் கொடுத்தவர்கள் போதுமான கடன் ரத்து செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்”என்றும் தெரிவித்திருந்தனர்.

இலங்கையின் பத்திரங்களை பெற்றுள்ள தனியார் குறித்து கேள்விக்கு பதிலளித்த வீரசிங்க, “நாங்கள் தனியார் கடன் வழங்குநர்களுடன் நல்ல நம்பிக்கை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறோம். அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதையும் எங்களுடன் ஈடுபாட்டுடன் இருக்க தயாராக இருப்பதையும் நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உடன்படிக்கைக்கு உடன்பாடு ஏற்பட்டவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை “நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள்” இலங்கைக்கு விநியோகிக்க முடியும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஆளுநர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.