;
Athirady Tamil News

இந்திய ஒற்றுமை யாத்திரை நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது: ராகுல் காந்தி!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, நேற்று அங்கிருந்து புறப்பட்டது. காலையில் காடோடா கிராமம் அருகே இமாசல பிரதேசத்துக்குள் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர். வாழ்த்து கோஷங்கள் முழங்கின. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

குறிப்பிட்ட சிலர் மட்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், ராகுல்காந்தி சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞர்களுடன் உரையாடினார். மான்சர் சுங்கச்சாவடி அருகே ராகுல்காந்திக்கும், தொண்டர்களுக்கும் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு, துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் திரண்டு நின்று வரவேற்றனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர்சிங் ராஜா வார்ரிங், தேசிய கொடியை இமாசலபிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங்கிடம் ஒப்படைத்தார்.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:- “பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கத்தில், கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை தொடங்கினோம். இது நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயன்றோம். வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் நாட்டின் முக்கிய பிரச்சினைகள். ஆனால் இவற்றை பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை. நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவை மூலமும் எழுப்ப முடியவில்லை. ஏனென்றால், அவை மத்திய அரசின் நிர்பந்தத்தில் இயங்குகின்றன.

எனவே, மக்களிடமே இப்பிரச்சினைகளை பேசுவதற்காக பாதயாத்திரையை தொடங்கினோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் உள்பட மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் மூன்று, நான்கு பெரும் கோடீசுவரர்களுக்கு நன்மை செய்வதை நோக்கமாக கொண்டவை. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. நாட்டில் வெறுப்பு, வன்முறை, அச்சம் ஆகியவற்றை பரப்பி வருகிறது. முதலில், பாதயாத்திரை பயணத்தில் இமாசலபிரதேசம் இல்லை. பின்னர், பயண வழியை மாற்றி, இமாசலபிரதேசத்தையும் சேர்த்துள்ளோம். இங்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். 30-ந் தேதி, காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவடைகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.