;
Athirady Tamil News

திருப்பதி கோவில் மீது ஆளில்லா குட்டி விமானம் பறந்ததாக வீடியோ பரவுகிறது- பாதுகாப்பு குறைபாடு என பக்தர்கள் புகார்!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மற்றும் திருமலையில் ஆகம சாஸ்திரப்படி கோவிலுக்கு மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தடையை மீறி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பறக்கும் டிரோன் கேமரா உள்ளிட்டவைகளை சுட்டு வீழ்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 நிமிடம் 11 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ டிரோன் ஷாட்ஸ் என்ற தலைப்பில் யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் திருப்பதி பேடி ஆஞ்சநேயர் சாமி கோவிலிலிருந்து, கொல்ல மண்டபம், மஹா துவாரகா, ஆனந்த நிலையம், வசந்த மண்டபம் வரை ஏழுமலையான் கோவிலுக்கு மேலே காட்சிகள் தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது உண்மையான வீடியோ என்றால் பாதுகாப்பு படையினரின் பலவீனத்தை காட்டுகிறது என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள கோவில் மீது பறந்த ஆளில்லாத குட்டி விமானம் பாதுகாப்பு வீரர்கள் கண்ணில் படவில்லையா அல்லது கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். பதிவிடப்பட்டுள்ள வீடியோவை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு பதிவிட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். கூகுள் மேப்பில் வீடியோ சேகரிக்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தேவஸ்தான முதன்மை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.

இந்த வீடியோ உண்மையானது அல்ல இருப்பினும் ஆய்விற்கு பிறகு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளில்லா குட்டி விமானம் கோவில் உச்சியில் எப்போது பறந்தது என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.