;
Athirady Tamil News

ஜனநாயக சர்வாதிகாரி ரணில் !

0

ரணிலுக்கு இந்தத் தேர்தல் நடந்தாலும் ஒன்று.. நடக்காவிட்டாலும் ஒன்று..

போனவாரம் புத்தளம் கூட்டுறவுச் சங்க தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இட்ட அணி..
இப்போது தேர்தல் நடந்தால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மண் கவ்வும்.. அதன் பின்னர் எதற்கும் தன்னை நம்பியே அவர்கள் இருக்க வேண்டும் என்பது ரணிலின் கணிப்பு…

இந்த தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தவோ அல்லது வேட்புமனுத் தாக்கல் செய்யும் எந்த இடத்திலோ பெசிலை காணமுடியவில்லை. அக்கட்சியின் பொறுப்புகளை நாமல் கவனிக்கிறார். தேசிய அமைப்பாளர் பதவியை நாமலுக்கு வழங்குவதாக முன்னர் சொல்லப்பட்டாலும் அதனை பெசில் வைத்திருப்பது அக்கட்சிக்குள் பூகம்பமாக வெடிக்க தகித்துக் கொண்டிருக்கிறது.

மறுபக்கம் விமல் , கம்மன்பில , சரத் வீரசேகர உட்பட சிங்கள இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்று தெரிந்தும் மாகாண சபைகளுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறேன் என்று ரணில் நேற்று கூறியிருப்பதன்மூலம் , சிங்கள தேசியவாதிகளை மெதுவாக ராஜபக்ச தரப்பிலிருந்து வெளியேற்றுகிறார் விக்கிரமசிங்க..

எலெக்சன் வருமாயின் இந்த விடயத்தை வைத்தே ஓட்டுக்களை அள்ளுவார்கள் விமல் அணி.. சிங்கள மக்கள் இந்த இனவாத பேச்சுகளுக்கு இனியும் எடுபடமாட்டார்கள் என்று கருதிவிட முடியாது..

13 ப்ளஸ் தருவேன் என்று ஏற்கனவே கூறியிருக்கும் மஹிந்த ராஜபக்ஸவாலும், மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்காதீர்கள் என்று கூற முடியாத இக்கட்டு.

சர்வதேச நாணய நிதிய கடனைப் பெறவேண்டும் என்பதால் இந்தியா சொல்லும்படி , 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என்று கூறி இந்தியாவின் நல்லெண்ணத்தைப் பெற்று மறுபக்கம் சிங்கள தேசியவாதிகளின் ஆதரவைப் பெறமுடியாதபடி பெரும் கிடங்கை வெட்டி அதில் பொதுஜன பெரமுனவை தள்ளியுள்ளார் ரணில்..

13 ஆவது திருத்தம் கொஞ்சம் கொஞ்சம் அமுலுக்கு வருமாயின் , தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை வைத்துக்கொண்டு இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லலாம் விக்கிரமசிங்க.. சிங்கள வாக்குகள் சிதறிப்போயிருப்பதால் இனி வரும் தேர்தல்களில் தமிழ் , முஸ்லிம் ஆதரவு இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் வெல்வது கடினம் என்று கணக்குப் போடுகிறார் ரணில்…

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ரணிலுக்கு கவலையே இல்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரதி உயர்நீதிமன்றுக்கு வரும் வாரம் செல்கிறது. தேர்தலுக்கு நிதியில்லை என்பதால் மீண்டும் நாடு பின்னோக்கிச் செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாமென மறைமுகமாக திறைசேரி உயர்நீதிமன்றுக்கு செய்தியை சொல்லியிருக்கிறது.

நாட்டின் பக்கம் நின்று பார்த்தால் தேர்தலை ஒத்திவைப்பதே நீதிமன்று முன்னுள்ள தெரிவு. மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி, வரிசை , போராட்டம் , ஆர்ப்பாட்டமென வந்துவிடும் என்ற அச்சத்தை ஊட்டும் வேலைகளை அரசு லாவகமாக செய்வதால் மன்றுக்கு இதைத் தவிர வேறு ஒப்ஷன் இல்லை.

ஆனால் அரசின் நியாயங்களை கடாசித்தள்ளி , நீதிமன்று தேர்தல் நடத்த இடமளிக்கும் என்பதுதான்
பரவலான கருத்தாக இருக்கிறது.

1982 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையே நடத்தாமல் சர்வசன வாக்கெடுப்பில் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடித்த மாமனார் ஜே .ஆரின் மருமகன் ரணில் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ?

வரும் கிழமை , ரணில் விபூதி அடிப்பாரா? அல்லது உயர்நீதிமன்றம் ரணிலுக்கு கொட்டு வைக்குமா என்பது தெரிந்துவிடும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.