;
Athirady Tamil News

6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள் !!

0

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக நேற்று இரவு நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள், ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளருக்கு சனிக்கிழமை இரவு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று மாலை ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் சேராங்கோட்டை கடற்கரையில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சேராங்கோட்டை கடற்கரை மணலில் வெள்ளை சாக்கு மூட்டைகள் சில புதைத்து வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதை சோதனை செய்த போது சுமார் 15க்கும் மேற்பட்ட சாக்குப் பைகளில் 250 ஜோடி காலணிகள் இருந்தது.

இதனையடுத்து 250 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தினர்.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தயாராக கடற்கரை மணலில் பதுக்கி வைத்தது தெரிய வந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு சமையல் மஞ்சள், யூரியா உரம், வலி நிவாரணி, மருத்துவ பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.