;
Athirady Tamil News

தமிழ்நாடு கவர்னராக பணியாற்றும் அனுபவம் புதுமையானது- மனம் திறந்த கவர்னர் ஆர்.என்.ரவி!!

0

தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் கவர்னரின் அனுபவம் பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:- 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி, தற்போது தமிழ்நாடு கவர்னராக பணியாற்றும் அனுபவம், புதுமையானது. திடீரென மத்தியில் ஆட்சி மாறியதும், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றுமாறு பிரதமர் என்னை கேட்டுக் கொண்டார். நான் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டேன். மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இடம் என்பதால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட நான் அங்கு சென்றேன். நான் ஐ.பி.எஸ். பணியில் கேரள பிரிவு அதிகாரியாக இருந்தேன்.

தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்தபோது அதற்கும் இங்குள்ள மொழி மற்றும் மக்களும் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன். இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷ யங்களை தெரிந்து கொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது. இது ஒரு அற்புதமான இடம். இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். கலாசாரம் மிகவும் ஆழமானது மற்றும் வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது, ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழின் செழுமையை நாடு முழுவதும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் வரலாற்றை எல்லாம் படித்து வருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதே முறையில் பின்பற்றப்பட்ட பல ஆயிரம் உடைக்கப்படாத கலாசார மரபுகளைக் கொண்ட இடமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகம் உடைக்க முடியாத பாரம்பரிய தொடர்பை கொண்டிருப்பதாகவும், வெளிநாட்டில் குடியேறிய தமிழ்நாட்டு மக்கள் அங்கு தமிழ் மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கவர்னராக நான் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். புதிய மனிதர்கள், புதிய விஷயங்களை அறிவது, வரலாற்று இடங்களுக்குச் செல்வது போன்ற மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற இந்த பணி எனக்கு உதவுகிறது. பயிற்சி பெறும் அலுவலர்கள் அனைவரும் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகள், பழங்கால கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்கள், தஞ்சை கோவில்கள் போன்ற இடங்களுக்குச் சென்றால் அவற்றின் முன்பு கிரேக்க கட்டிடக்கலை கூட தோற்கும். அந்த இடங்களின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தான வளம் வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது. தமிழரல்லாத மக்கள் தமிழின் சில அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதற்காக, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியில் சில குறுகிய படிப்புகளை அறிமுகப்படுத்த ஊக்குவித்து வருகிறேன்.

சமீபத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது, அதன் இரண்டு வருட டிப்ளமோ தமிழ் டிப்ளமோ படிப்பின் மூலம் சுமார் 30 தமிழ் அல்லாத மாணவர்கள் தமிழ் கற்பதைக் கண்டு மகிழ்ந்தனர். அவர்களை தமிழ்நாட்டுக்கு 10 நாட்கள் சுற்றுலா வருமாறு அழைத்து தமது விருந்தினராக அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிடும்படியும் கேட்டுள்ளேன். பல சமயங்களில், நீங்கள் சிக்கல்களை சந்திக்கலாம். தலையீடுகளைப் பற்றி சிலர் புகார் செய்யலாம், ஆனால் நீங்கள் உறுதியாக இருக்க விரும்பினால், நீங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதன் மூலம் நீங்கள் வளருவீர்கள். கேடர் என்ற ஐ.ஏ.எஸ். மாநில பிரிவு உங்களுக்கு அரசாங்கத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை மட்டுமே தரும். இந்த பதவியை அடைந்திருப்பது விளையாட்டான விஷயமல்ல.

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டம் சிறியதாக இருந்தால் கூட, அதைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் பணியாற்றுங்கள். சவால்களை சந்திப்பதன் மூலம்தான் நீங்கள் வளர்வீர்கள். இந்தியாவின் உள்ளார்ந்த ஒற்றுமை மற்றும் கலாசார தொடர்பு ஞானம், பழக்கவழக்கங்கள், மதம், இனம், மொழி போன்ற அனைத்தையும் தாண்டி தேசத்தின் பலமாக விளங்குகின்றன. நாட்டையும் அதன் மக்களையும் நாம் பார்க்கும் விதம் கடந்த காலத்தைப் போலல்லாமல் இப்போது மாறிவிட்டது, அந்த காலத்தில் காலனித்துவ மரபு வேறுபட்ட அணுகு முறையுடன் தொடர்ந்தன.

வடகிழக்கு மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையேயான கலாசார தொடர்பு மக்களை மொழி, இனம், மதம் அல்லது பிராந்திய கண்ணோட்டத்தில் தான் நாம் பார்க்கும் வழக்கம் உள்ளது. ஆனால், காஷ்மீரில் இருந்து ராமேஸ்வரம் வரை அந்த காலத்திலேயே மக்கள் பயணித்தபோது தங்களுடைய மரபுகளை சுமந்து வந்தனர். தமிழ்நாடு மற்றும் அதன் புகழ்பெற்ற வரலாறு அந்த காலத்தில் சென்னை மாகாணம் என்ற பெயர் வரும் முன்பு அது மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. முகலாயர்களை விரட்டவே அவர்கள் இங்கு வந்தனர். 1801-ல், மராட்டியர்களிடமிருந்து இந்த பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய போது தலைநகரம் தஞ்சாவூர் ஆக இருந்தது.

செர்போஜி மராட்டிய மகாராஜா ஆங்கிலேயருக்கு அப்போது ஒரு கடிதம் எழுதினார், நீங்கள் இந்த பகுதியை எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை வழிநெடுகிலும் நடத்தப்பட்டு வரும் சத்திரங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு மூன்று வேளை உணவு சத்திரங்களில் வழங்கப்படுகிறது. அவற்றை அழித்து விடாதீர்கள் என்று கூறியிருந்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு அவற்றை அழித்தனர்.

அந்தக் கடிதத்தின்படி பார்த்தால் மக்கள் சுதந்திரமாக வடகிழக்கில் இருந்து தெற்குக்கு வந்து சென்றதை அறியலாம். அப்படி நடத்தப்பட்ட தர்மசாலைகள், சத்திரங்களை ஆதரிக்க பல அமைப்புகள் இருந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த கலந்துரையாடலின் போது கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் வி பாட்டீல் மற்றும் ராஜ்பவன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.