;
Athirady Tamil News

எப்.பி.ஐ நடத்திய 13 மணி நேர சோதனையில் அதிபர் பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்கள் சிக்கின: அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு!!

0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய 13 மணி நேர சோதனையில் மேலும் சில ரகசிய ஆவணங்கள் சிக்கிய விவகாரம் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார். இவர் 2009ம் ஆண்டு முதல் 2016 வரை அமெரிக்க துணை அதிபராக இருந்துள்ளார். அந்த காலகட்டத்தில் பல முக்கிய ஆவணங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்ததாக பைடன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கடந்த நவம்பர் 2, டிசம்பர் 20, ஜனவரி 12ம் தேதிகளில் 12 ரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவை அனைத்தும், பைடன் துணை அதிபராக பதவி வகித்த காலகட்டத்தை சேர்ந்தவை. அமெரிக்க அதிபர் ஆவணங்கள் சட்டப்படி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், வெள்ளை மாளிகையில் உள்ள அனைத்து அரசு ஆவணங்களும், தேசிய ஆவண காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும். அப்படிப்பட்ட ஆவணங்கள், அதிபர் பைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பைடனின் பூர்வீக வீடு மற்றும் அலுவலகத்தில் மேற்கொண்டு ஆய்வு நடத்த அட்டர்னி ஜெனரல் மெர்ரிக் கார்லாண்டு கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ அதிகாரிகள், டெலாவேரில் உள்ள அதிபரின் வில்மிங்டன் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் மேலும் 6 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனை நடந்த போது அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன் வில்மிங்டன் வீட்டில் இல்லை என அதிபருக்கான தனிப்பட்ட அரசு வக்கீல் பாப் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி எம்பிக்கள், அதிபர் பைடனை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.