;
Athirady Tamil News

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெப்ரல் அமைப்பு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!!

0

தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வரும் சூழலில், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைகளின் தாமதமானது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும்.

அத்தோடு இது புலனாய்வுப் பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட பொலிஸாரின் பெருமையையும் கேள்விக்குள்ளாக்கும் என்று பெப்ரல் அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பெப்ரல் அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளான தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விரைவில் பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு முதலில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் முதலாவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு 12 நாட்கள் நிறைவடைந்துள்ள போதிலும் , இதனுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

வெளிநாட்டிலுள்ள நபரொருவரே இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பதும், அவருக்கு இலங்கையிலும் ஆதரவு வழங்கப்படுகின்றமையும் தெளிவாகத் தெரிகிறது.

சில ஆணையாளர்களது இல்லங்கள், வாகனங்கள் புகைப்படமெடுக்கப்பட்டு அவை வட்ஸ்அப் செயழியூடாக அவர்களுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது பல சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்த தொலைபேசி அழைப்பிற்கு எவ்வாறு பணம் செலுத்தப்பட்டது என்பதை ஆராய்ந்தால் இந்த சம்பவம் குறித்த ஏதேனும் தகவல்கள் கிடைக்கக் கூடும்.

உங்களின் கீழ் இயங்கும் பொலிஸ் திணைக்களம் திறமையான குற்றப்புலனாய்வு பிரிவினைக் கொண்டது. அதி நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் இந்த யுகத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தாமதிக்கப்படுவதன் ஊடாக, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதோடு, அவர்களது செயற்பாடுகளையும் சுதந்திரமாக செய்வதற்கும் இடையூறாக அமையும்.

தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வரும் சூழலில், இந்த விசாரணைகளின் தாமதமானது மக்களின் நம்பிக்கையை குலைப்பதற்கு காரணமாக அமையும் என்பதுடன், புலனாய்வுப் பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட பொலிஸாரின் பெருமையையும் கெடுக்கும்.

எனவே இவ்விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய விசாரணைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.