;
Athirady Tamil News

வீடியோ விவகாரம்: எடிட் செய்ததாக எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்… அண்ணாமலை சவால்!!

0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமைச்சர் கே.என்.நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. ஒருபுறம் அமைச்சர் எ.வ.வேலு மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பின்னணியில் நேருவின் குரல் மெதுவாக கேட்கிறது. தொகுதியில் பணப்பட்டுவாடா பற்றி பேசுவதுபோல் அந்த வீடியோவில் இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாஜக, திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் எ.வ.வேலு, சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார் இந்நிலையில் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அமைச்சர், சேர் வருவதற்கு தாமதம் ஆனதால் தொண்டர்கள் மீது கல் எடுத்து எறிகிறார். அவர் இன்னும் பதவியில் இருக்கிறார். இரண்டு நாள் கழித்து மற்றொரு அமைச்சர் மேடையில் தொண்டரை அடிக்கிறார். இதை தமிழ்நாடே பார்த்தது. அதன்பிறகு தமிழக பாஜக நேற்று 2 வீடியோக்களை வெளியிட்டது. அதில், ஒரு வீடியோ அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் சேதுசமுத்திர திட்டம் தொடர்பான திமுக விளக்கக் கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோயை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். இது தொடர்பாக இளங்கோவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அந்த வீடியோ கட் செய்து எடிட் செய்யப்படாத வீடியோ, இடையில் எதுவும் எடிட் செய்யப்படவில்லை.

அந்த வீடியோவில், ஒரு கோவிலை இடிப்பதை பெருமையாக எம்.பி. டிஆர் பாலு பேசினார். கோவிலை இடித்தால் ஓட்டு போடமாட்டார்கள் என்று சொன்னார்கள், எப்படி ஓட்டு வாங்குவது என்பது எனக்கு தெரியும் என அவர் பேசியிருக்கிறார். தனது பேச்சு தவறு என உணர்ந்து, கடைசியில் பேச்சை முடிக்கும்போது நான் பெரிய கோவிலை கட்டியும் கொடுத்தேன் என்கிறார். அவர் கோவிலை கட்டி கொடுத்தது முக்கிய அம்சம் கிடையாது. ஒரு கட்சியின் மூத்த தலைவர், எம்.பி.யாக இருப்பவர் கோவிலை இடிப்பதை பெருமையாக பேசியதை மக்கள் பார்த்தார்கள்.

நேற்று ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேலை செய்வதற்காக சென்ற அமைச்சர்கள் பேசியதை வீடியோவில் பார்த்தோம். மார்பிங் செய்து எடிட் பண்ணி வீடியோவை போட்டதாக அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருக்கிறார். அவருக்கு சவால் விடுகிறேன். ஒரிஜினல் வீடியோவை அமைச்சர் எ.வ.வேலு எங்கே கொடுக்க சொல்கிறாரோ அங்கே கொடுக்கிறோம். அவர் சொல்லும் தமிழ்நாடு காவல்துறையிடமே கொடுக்கிறோம். அந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு முதலமைச்சர் உட்படுத்தவேண்டும். அதற்கு பாஜக தயாராக இருக்கிறது.

அந்த வீடியோவில், 31ம் தேதிக்குள் பணம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் பேசுகிறார். எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியும், எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியாது என பேசுகிறார். நீலகிரியின் பொறுப்பு அமைச்சரை மிகமிக தவறாக ஒரு கீழ்த்தரமான வார்த்தையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். இது தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது பற்றிய விஷயம் மட்டுமல்லாமல், திமுக தனது சகாக்களை எப்படி பார்க்கிறது?, ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து அமைச்சராக ஒருவர் வந்தால் கே.என்.நேரு எப்படிப்பட்ட வார்த்தையால் அந்த அமைச்சரை பேசுகிறார்? என்பதை காட்டுகிறது. இவர்கள் சமூக நீதியைப்பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

நாளை காலை பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவை கொடுக்க உள்ளனர். அதை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு, மாநில டிஜிபிக்கு அதை அனுப்பலாம், தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யலாம். எ.வ.வேலு அவர்கள் அந்த டேப்பை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார். கே.என்.நேரு பேசியதை அப்படியே போட்டிருக்கிறேன். அது உண்மையான ஆடியோ என்பது உறுதி செய்யப்ட்டால் முதலமைச்சர், தமிழக மக்களிடம் பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.