;
Athirady Tamil News

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகும் அரசியல் கட்சிகள்- வேட்பாளர் தேர்வில் தீவிரம்!!

0

கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆயத்தமாகி வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வினர் இப்போதே பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஏற்றார்போல் பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி கர்நாடகம் வந்த வண்ணம் உள்ளார். காங்கிரஸ் கட்சியினரும் சூறாவளியைபோல் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சார்பில் டிக்கெட் பெற அக்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கட்சிகளின் மீது அதிருப்தி கொண்டவர்கள் மாற்று கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தலைவர்கள் தொடங்கி உள்ளனர். அதன்படி, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத், பிரசாரக்குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்பட தேர்தல் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது 130 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம் என்பதால், அந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் குறித்து தலைவர்கள் முதலில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் 150 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியலை காங்கிரஸ் மேலிட தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைத்து, ஒப்புதல் பெற தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனதாளதளம் (எஸ்) கட்சி சார்பில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பஞ்சரத்னா யாத்திரை நடைபெற்று வருகிறது.

குமாரசாமி செல்லும் பகுதியெல்லாம், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பஞ்சரத்னா யாத்திரை நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயாரிப்பது குறித்து பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநில தலைவர் சி.எம். இப்ராகிம், குமாரசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்து 2-ம் கட்ட பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.