;
Athirady Tamil News

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் – அண்ணாமலை உள்ளிட்டோர் எஸ்.ஜெய்சங்கரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல்!!

0

இலங்கையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான தலையீட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கிளை தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் எனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதனை மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை மறுபுறம் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சிக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ‘அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தச்சட்டம் கடந்த 37 வருடங்களாக இருக்கின்றது.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதனால் இதுகுறித்த யோசனைகளை அடுத்த இருவாரங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்றக்கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.

எனவே அதற்கு முன்னர் சகல அரசியல் கட்சிகளும் 13 ஆவது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை எனக்கு அறிவிக்கவேண்டும்’ என்று ஏனைய கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கிளையின் முன்னாள் தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கிளை தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளனர்.

இதன்போது இலங்கையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தலையீட்டை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கடிதமொன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.