;
Athirady Tamil News

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா – உளவு பலூனால் புதிய சிக்கல்!!

0

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும் படியாக பறந்து சென்றது.

அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும் போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை கைவிட்டு விட்டோம் என அமெரிக்க இராணுவம் கூறியது.

அதன் இயக்கம் சார்ந்த தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதிபர் பைடன், கடந்த புதன்கிழமை சீனாவின் கண்காணிப்பு பலூன் பற்றி என்னிடம் விவரங்களை கூறினார்கள்.

அதனை முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுட்டு தள்ளும்படி ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டேன். அவர்கள் அதனை சுட்டு வீழ்த்தி விட்டனர்.

நிலப்பகுதியில் வசிக்கும் யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். எங்கள் நாட்டில் இருந்து 12 மைல் எல்லைக்குள், நீரின் மேற்பரப்பில் வந்தபோது, சிறந்த தருணத்தில் அதனை வீழ்த்த முடிவு செய்தனர்.

அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அதற்காக, இதனை செய்து முடித்த விமானிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் சிவிலியன் ஏர்ஷிப் என்று அழைக்கப்படும் தனது பலூனை அமெரிக்க சுட்டு வீழ்த்தியதற்கு , சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு எதிராக கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட இந்த விண் ஓடம், வானிலை ஆய்வு பணியில் ஈடுபட்ட நிலையில், திசைமாறி அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்து உள்ளது.

அதற்காக மன்னிப்பு கேட்கப்பட்ட பிறகும் அமெரிக்க இப்படியான ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது சர்வதேச நடைமுறையை மீறிய ஒரு செயல் ஆகும்.

இது தொடர்பாக சீனா நிச்சயம் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்கும்.

சட்டப்படி உரிமையை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – சீனா நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாகவே இந்த ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.